Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

பாதை காலறியும் – அ. வேல்முருகன்

$
0
0

தி வேல்முருகன்

பெருமழை குஐராத் முழுவதும் பொழிந்தாலும் இந்த ஐாம்நகரை மட்டும் ஒதுக்கி விடுகிறது. இரண்டு வருடமாக மழையே இல்லை. இந்த வருடமும் மே மாத வெயில் சிறிதும் கருணையில்லாமல் உதிரத்தையே வேர்வையாக உறிஞ்சுகிறது. தாகத்துக்கு வயிறு முட்ட தண்ணீர் குடித்த பின்னும் எனக்கு ஒரு டீ குடித்தால் தெம்பாக இருக்கும் என்று தோன்றியது.
“சஞ்சய் ஒரு டீ கொடப்பா, பத்தரை மணியாச்சி பாரு…”

“சார், பால் திரிஞ்சு போச்சு. கொஞ்சம் இருங்க, வாங்கி வர ஆள் விட்டுருக்கேன்.
இப்ப வந்துடுவான்”

“ஏம்பா படிக்கலயா? வேற வேலை எதாவது செய்யக்கூடாதா?”

“செய்யலாம்தான் சார். வேலையும் தெரியும் ஆனா இப்படிதான் கிடக்குமுன்னு இருக்கும் பாருங்க, அதுதான்”

“என்னப்பா சொல்ற?’

“ஆமாம் சார், நான் நல்லா படிக்கணுமுன்னுதான் நினைச்சேன் ஆனால் பாருங்க எனக்கு படிக்க குடுத்து வைக்கல”

“ஏன் தம்பி எண்ணாச்சு? விருப்பம் இருந்தால் சொல்லு”

“இல்லை சார் அந்த முடிந்த கதையை பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை”

சஞ்சய் முகம் பார்த்தால் அவன் சொல்ல முடியாத சோகத்தில் தவிப்பது புரிந்தது, டீ பாய் என்றால் கொஞ்சம் திமிராகதான் இருப்பார்கள். சஞ்சய் அப்படி கிடையாது ஆள் பார்க்க களையாக, படிய வாரிய தலைமுடி, எப்போதும் சிரித்த முகம் என்று இருப்பான். வயிரே இல்லாத ஓங்கிய உருவம். டீ பாய் என்றால் நம்ப முடியாது

அப்புறம் எதிர்பாராத ஒரு நாள் அவனாகவே தன கதையைச் சொல்லத் தொடங்கி விட்டான். யாருமற்ற ஒரு மதியநேரம். பொறுமையாக அனைத்தும் கேட்டேன்.

உலகமெல்லாமிருந்து கங்கைய தரிசிக்க அலகாபாத் வராங்க. ஆனா நான் அங்கேயிருந்து ஓட வேண்டியதா போயிடுச்சு சார்.

நீங்க அன்றைக்கு என்னைக் கேட்டபிறகு பழைய விஷயங்களை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அது பாட்டுக்கு மனதில் ஓட ஆரம்பித்து விட்டது, தெய்வத்திடம் முறையிடுவது போல்.

கொஞ்சம் கேளுங்கள்.

வீட்ல அப்பா,அம்மா அண்ணன் இரண்டு தங்கச்சி ஒரு தம்பி எனக்கு, ஒரு கவலையும் இல்லை பள்ளிக்கு போறது வீட்டுக்கு வர்றது விளையாடறதுன்னு இருந்தேன்

அப்பா அம்மா இரண்டு பேருமே வேலைக்கு போவாங்க. அண்ணன் பெயிலா போனதால சும்மா சுத்திட்டு இருப்பான். ஒரு நாள் வேலைக்குப் போன அப்பாவுக்கு உடம்பு முடியல. அப்பா எப்பவும் பீடி குடிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமா ஆஸ்த்துமாவாகவும் டி.பியாகவும் உடம்புல வந்து முத்திப் போச்சு. எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம் காப்பாத்த முடியல .

நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு 13 வயசு அம்மா ஒண்டி வேலைக்கு போயி வெறும் கோதுமை மட்டும் கூலியாக வாங்கி வரும் அது ரொம்ப குறைவாகதான் இருக்கும் அதனால மில்லுல்லெல்லாம் அறைக்க மாட்டாங்க பிறகு அத குத்தி இடிச்சு சுத்தம் பண்ணி கையால சுத்தி மாவாக்கி ரொட்டி சுடும் எல்லாரும் சாப்பிடற அளவு இருக்காது அந்த வேலையும் சரியாக கிடைக்காதபோது பட்டினிதான்.

இப்படி இருந்த ஒரு நாள் அண்ணன் பசி தாங்காம எங்கயோ பொயிட்டான். அந்த சமயம் நான் வீடுவீடா பேப்பர் போடற வேலை செய்யப் போனேன். பள்ளிக்கூடம் போகாம இது போல வேலைக்கு போவலாமான்னு நான் அம்மாகிட்ட சொன்னேன். அம்மா முதல்ல என்ன கட்டிக்கிட்டுஅழுதுச்சு பிறகு தெரிஞ்சவங்க வீட்டிற்கு கூட்டிட்டுப் போய் பையன் வேலைக்கு போறேன்னு சொல்றான் நீங்க எதாவது செய்ய முடியுமான்னு கேட்டுச்சு

அந்த மாமா என்ன உத்துப்பார்த்தாரு. அவங்க வீட்ல அப்ப காலை நாஷ்டா செஞ்சுக்கிட்டு இருக்காங்க. செஞ்ச வாடை அடிக்குது. அவரு, “நீ ஏம்பா வேலைக்குப் போவனும், “படிக்கலாமில்லையா?” என்று கேட்டாரு

நான் சொன்னேன், “சாப்பிடனும்ல்ல மாமா,”ன்னு
என்னை அப்படியே பார்த்துட்டு அவரு அம்மாட்ட நூறு ரூபாய் கொடுத்து, “பையன நான் இட்டுப் போக மாட்டேன்,” என்று சொன்னதும் அம்மா கண்ணு கலங்குது. மாமா பார்த்துடப் போறாருன்னு அப்படியே திரும்பிப் மானத்தைக் பார்த்து முந்தானையால தொடச்சிக்குது.அவரு, ‘பீவி,”ன்னு ஒரு குரல் கொடுத்தாரு ஒரு அம்மா வந்துச்சி அவரிடம் மாமா எனக்கும் அம்மாவுக்கும் நாஷ்டா கொடுக்க சொன்னார்.

அம்மா பணத்தை அங்கேயே வைத்து விட்டு விடுவிடுன்னு என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பச்சு.

அப்ப அந்த வீட்டுக்கார அம்மா எனக்கு ரோம்ப பிடித்த பூரியும் பாஐியும் எடுத்துக்கிட்டு வந்துச்சி நான் உத்துப் பார்த்தத பார்த்த அம்மா என்னை ஒரு அடி அடிச்சுடுச்சு அங்கிருந்து கிளம்பி வீடு வந்ததும் என் கை காலையும் தலையெல்லாமும் தடவி அம்மா அழுதுச்சு.

“நீ அழுவாதம்மா, நான் பெரியவனாயி உனக்கு பணம் சம்பாதிச்சு தரேன்,”னு சொன்னேன் .

எனக்கு அப்ப அதெல்லாம் புரியல. வீட்டுல இருந்து வெளில வந்தேன். என் வயது ஒத்த பசங்க எல்லாம் விளையாடக் கூப்புடுறாங்க. எனக்கு பசியிருந்ததால வீட்டிற்கு திரும்பப் போய் தண்ணி குடிச்சதும் வெறும் வயிறு வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. அம்மா அப்படியே சோர்ந்து படுத்துக் கிடக்கு.

பசியில எனக்கு கோவம். ஏதாவது கிடைக்குமா என்று வீடு முச்சுடும் தேடினேன். நாமும் அண்ணன் போல வீட்ட விட்டு ஓடிப்போவும்னு நினைச்சேன்.

ஓடிப்போன அண்ணன அம்மா திட்டவே இல்ல எம்புள்ள எங்கேயாவது போயி பொழைச்சுகிடும், இங்க பட்டினி கிடந்து சாவறதவிட அவன் போனதே நல்லதுன்னு ஒரு நாள் சொல்லுச்சு

அப்பாவோட பொருட்கள்ல தேடும்போது ஓரு நஞ்சி போன ஐம்பது ரூபாய் நோட்டு அதோட பழைய சட்டையிலருந்து கிடைச்சுது. இனி எங்கேயாவது போயிடுவோம். காசு சம்பாரிச்சு வீட்டிற்கு வருவோம்னு மனசுலே சாமிய கும்பிட்டேன்

அம்மா எப்ப முழிச்சதுன்னு தெரியல
அமைதியா என்னப் பார்த்த அம்மா, ‘என்னடா?’ன்னு கேட்டுச்சு

நான் சொன்னேன், “வேல ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கப் போறேன் வர நேரம் ஆனா தேட வேண்டாம்”னு.

சொல்லிவிட்டு நேரா கால் போன போக்குல நடந்தேன் அப்ப ஒரு ரயிலு போறத பார்த்தேன். அவ்வளவுதான் எனக்கு ரயில்ல போகனுமுன்னு தோணிச்சு. நேரா ரெயில்வே ஸ்டேஷன் போனேன்.

கங்கையை தரிசிக்க உலகமெங்கும் இருந்து வரும் மக்கள் கூட்டம். விதவிதமான, அதுவரை பார்த்தேயிராதவர்கள். எனக்கு திகைப்பா இருந்துச்சு. எனக்குத் தெரியும் அம்மா இனி தேடி வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுன்னு. அவ்வளவு கூட்டம். வந்த ரயில்ல யாரும் இல்லாத பொட்டியில ஏறிட்டேன். டிக்கெட்லாம் ஒன்னும் எடுக்கல. ரயிலு எங்க போவும்னு தெரியாது. பாவு பாஐி வந்துச்சி வாங்கி சாப்பிட்டுட்டு வாஷ்பேசின்ல தண்ணி குடிச்சேன். கண்ண சுழட்டி தூக்கம். அப்படியே சீட்டுக்கு அடியில படுத்துட்டேன்

நல்ல தூக்கத்தில் பெரண்டு படுக்கும்போது சீட்ட விட்டு வெளியே வந்து கிடந்திருக்கேன். டிடிஆர் பார்த்து எழுப்புராறு என்னை. எழுந்ததும் டிக்கெட் கேட்கிறார்

நான் பயந்து கொண்டே, டிக்கெட் இல்லை, என்றேன்.

கன்னத்தில் ஒரே அறை. பொறி பறக்குது. சுருண்டு அப்படியே கீழே விழுந்துட்டேன்

என்னிடம் இருந்து சத்தம் வராதால் டிடிஆர் பயந்து தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் அடித்து, பேட்டா பேட்டா, என்கிறார்

நான், “ஓ…” என்று வினோதமான ஒலியுடன் அழுகிறேன். எனக்கு வீட்டு ஞாபகமும் இவர் மேலும் அடிப்போரோ என்று பயமும் வந்து விட்டது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததும், “பேட்டா நான் அடிக்க மாட்டேன். சொல்லு, நீ யாரு எப்படி இந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வந்த?” என்று கேட்டார் டிடிஆர்.

அழுதுகொண்டே, அப்பா இறந்ததிலிருந்து நடந்தது அனைத்தையும் சொன்னேன் அப்புறம், “இந்த பெட்டியில் யாரும் இல்லை, அதனால் ஏறினேன்,” என்றேன்.

‘நீ எங்க போற? இந்த ரயில் எங்க போவுதுன்னு தெரியுமா?’

“தெரியாது, வேலை தேடிப் போறேன்,” என்றேன்

“சரி, நீ என்ன ஊர் பேட்டா?’

“அலகாபாத்தில் ராம் நகர்”

“இந்த ரயில் பஞ்சாப் பாட்டியலா போவுது. நீ வா, அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி உன்ன வீட்டுக்குப் போற ரயில்ல ஏற்றி விடறேன். நீ வீட்டுக்குப் போ பேட்டா,” என்றார் டிடிஆர்.

நான் மறுத்து அழுதுகொண்டு இருந்தேன்

“பேட்டா நீ அழுவாத நான் இப்ப வரேன் இங்கேயே இரு,” என்று சொல்லிவிட்டு டிக்கெட் செக் பண்ண சென்றார்.

நான் அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து கதவு அருகே நின்று ஸ்டேஷன் வந்ததும் இறங்கி, விடுவிடு என நடந்தேன்.

ஒரு பெட்டியில் மிகக் கூட்டமாக எல்லோரும் ஏறிக் கொண்டு இருந்தனர் அதில் ஏறி உள்ளே சென்று டிடிஆர் வருகிறாரா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரிடமும் பேசவில்லை. ரயில் கடைசியில் ஒரு ஸ்டேஷனில் சுத்தமாக நின்று விட்டது

நீண்ட தலைப்பாகை அணிந்தவர்கள் எல்லாம் சலோ, சலோ என்று தள்ளிக்கொண்டு இறங்கினர். நானும் இறங்கினேன். நல்ல மாலை நேரச் சூரியன் முகத்திலடிக்க, ‘பாட்டியலா’ என்ற பெயரைச் சுவற்றில் பார்த்தேன்

கூட்டத்தோடு வெளியில் வந்த நான் ஒரு தள்ளு வண்டி பின்புறம் இருந்த தகர சீட் போட்ட ஓட்டலில் தாலி சாப்பிட்டேன். ரொட்டி கேட்கக் கேட்க கொடுத்தாங்க பிறகு கொஞ்சம் சோறும் சாப்பிட்டுட்டு காசு கொடுத்து விட்டு திரும்ப ரயில் நிலையம் வந்து படுத்துக்கொண்டே பார்த்தேன். என் வயது ஒத்த பிள்ளைகள் வழியில் வருபவர்களிடம் வயிற்றைக் காட்டி கை நீட்டிக் கொண்டிருந்தனர்.

பசியில் ஒரு முறை, பிச்சை எடுக்கப் போறேன் என்று சொன்னதும் அன்று என்னைக் கடுமையாக வாயிலும் முதுகிலும் அடித்த அம்மா ஞாபகம் வந்தது. அடுத்தடுத்து வரிசையாக தம்பி தங்கை ஞாபகம் வந்து தேம்பி அழ ஆரம்பித்து பிறகு அமைதியாகி சுற்றுமுற்றும் பாரத்தேன்.

சன்னமாக வீசிக்கொண்டு இருந்த காற்று ரயில் நிலையத்தில் புகுந்து குப்பைக் கூளங்களை அள்ளி எறிந்து பிளாஷ்டிக் பாட்டில்களை உருட்டிப் போட்டது. அப்பிள்ளைகள் கையேந்துவதை விட்டு விட்டு பாட்டில்களை பொறுக்க போட்டியிட்டனர்

மழை என் கண்ணீரைப் போல் சிறாக ஆரம்பித்து ஒரே லயத்தில் பெய்து தீர்த்தது. இரவானதும் அதே கடையில் பூரி பாஐி சாப்பிட்டேன் கடையில் இருந்த அக்கா, என்ன ஊர்?. என்று விசாரித்தார்கள். பதில் சொல்லாமல் பயந்து வந்து விட்டேன்

அன்று இரவு கொசுக்கடியில் தூக்கம் வரவில்லை எழுந்து ரயில் நிலையத்தில் சுற்றிச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆலமரம் ஒன்று பெரும் விழுதுகள் விட்டு மண்ணில் ஊன்றி நின்று கொண்டிருந்தது. பிச்சையெடுத்த பிள்ளைகள் அம்மரத்தடியில் இருந்தனர்.

விடியற்காலை அலகாபாத் செல்லும் ரயில் புறப்படப் போவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். எனக்கு வீடு, அம்மா, டிடிஆர் அடித்தது எல்லாம் ஞாபகம் வந்து என்ன ஆனாலும் போகக்கூடாது என்று வைராக்கியமும் வந்தது.

விடியும்வரை ரயில்கள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டு இருந்தேன் பசிக்க ஆரம்பித்ததும் பைப்பில் தண்ணீர் பிடிச்சு குடிச்சேன்

காசு தீர்ந்தது. அதுவரை இருந்த தைரியம் போய் பசியும் கவலையும் வந்து பயமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டு வெளியில் வந்து நான் வழக்கமா சாப்பிட்ட கடைக்கு[ப் போனேன். அங்க மழைத் தண்ணி வந்து தேங்கி நிற்க்குது. அந்த அக்காவும் சேட்டும் தண்ணிய வாளி வாளியா மொண்டு கொண்டு இருந்தாங்க.

நான் அந்த அக்காவிடம், “தீதி எனக்கு வேலை ஏதாவது கொடுங்க”ன்னு கேட்டேன்

அவங்க சேட்டைப் பார்த்தாங்க.

சேட்டு, “நீ என்ன வேலை செய்வே?”ன்னு கேட்டாரு

“நீங்க சொல்ற வேலைய செய்வேன் சேட்டு”ன்னு சொன்னேன்

அப்ப இந்த தண்ணீரைச் சுத்தமாக எடுன்னாரு

தீதிகிட்ட ஒரு பழைய பிளேட்ட கேட்டு வாங்கி ஒரு வாய்க்கால் சின்னதாக நோண்டி தண்ணீர் ஓடற மாதிரி பள்ளத்தில் விட்டேன். தேங்கி நின்னதை மட்டும் வாளியில் மொண்டேன்.

சேட் ஸ்டவ பத்த வைச்சு சாயா போட்டு ஒரு கிளாஸ் சாயாவும் தண்ணியும் கொண்டு எதிர்த்தாப்ல இருந்த மரத்தில் ஊத்திட்டு வந்தாரு

மூன்று கிளாசு சாயா ஊத்தினாரு. எனக்கும் தீதிக்கும் கொடுத்துட்டு அவரும் குடிச்சாரு

தீதி, “உனக்கு எப்படி இந்த மாதிரி தண்ணி போவ வைக்க தெரிஞ்சது?”ன்னு கேட்டுச்சு

“எங்க வீட்டுல மழைநாட்களில் தண்ணீ வீட்டு உள்ள வந்துடும் அப்ப அம்மாவும் நானும் இது மாதிரி செய்வோம்”

பிறகு என்னைப் பத்தி கேட்டதும் அதுவரை நடந்தத எல்லாம் மறைக்காமல் சொன்னேன். வேலை வேணும் என்று கேட்டவுடன் தீதி, “நீ இங்கேயே இரு”ன்னு சொல்லுச்சு

அந்தச் சின்னக்கடையை சுத்தம் பண்ண ஆரம்பித்து டேபிள் துடைத்து பாத்திரம் கழுவி சாயா போட்டு ஆலூ உறிச்சு மசலா பிசைந்து சமோசோ, ஐாங்கிரி, பூரி, சப்பாத்தி சுட்டு எம்மேலேயும் சுட்டுக்கிட்டு எல்லாம் வேலையும் கத்து இரண்டு வருசம் அங்க இருந்தேன். மாசம் 1800 ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுத்தாரு என்னை தீதியும் சேட்டும் நல்லா பார்த்துக்கிட்டாங்க.

ஆனால் எனக்குதான் புடிக்கல டீ குடிச்சுட்டு வரவங்க நூறு ரூபாய் கொடுப்பாங்க. நான் அத மாத்த ஒவ்வொரு கடையா போவனும் சில்லறை கேட்டா கெட்ட வார்த்தையில் திட்டுவாங்க சமயத்தில் அடிப்பாங்க. ஏதாவது வேற வேலை கிடைச்சா மாறனும் நிறைய சம்பாதிக்கனுமின்னு இருந்தேன்.

அப்பத்தான் பாட்டியலா அவுட்டர்ல ஒரு பிளாஸ்டிக் கம்பேனிக்கு ஆள் தேவை நாலாயிரம் ரூபாய் சம்பளம்ன்னும் கம்பேனி சாப்பிட, தங்க இடம் குடுக்குறத, சினிமாவுக்கு போன இடத்தில தெரிஞ்சுக்கிட்டேன். தீதிகிட்டயும் சேட்டுகிட்டயும் ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன்னு சொன்னேன். அவங்க ஒத்துக்கிட்டு போய் வர டிக்கெட்டுக்கு பணமும் கொடுத்தாங்க.

அவங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து எதிர்ப்புறம் நடந்தேன். விசாரித்து அந்த கம்பேனிக்கு போக பொழுதாயிடுச்சு. கேட் அருகே போனபோது கூர்க்கா உள்ளே என்னை விடவில்லை. அப்படியே சோர்ந்து ஓரமாக உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அந்த கூர்க்கா, “என்ன, நீ இன்னும் போவலையா?”ன்னு கேட்டாரு

“இல்லை, நான் வேலைல சேரணும் எனக்கு இங்கு யாரையும் தெரியாது நீங்க கொஞ்சம் உதவுங்க ஜி,”ன்னு கேட்டேன்.

உனக்கு என்ன வேலை தெரியும்னு கேட்டாரு எனக்கு கம்பேனி வேல எதுவும் தெரியாது ஏதாவது லேபர் வேலை கிடைச்சா செய்யலாம்னு வந்தேன், என்று சொன்னேன் அப்புறம் அவரு என்ன உள்ள இட்டுப் போயி தேஐ் பகதூர்கிங்கற நேப்பாளிட்ட விட்டாரு. அந்த நேப்பாளி இவரு தம்பிதான் இவரு பேரு ராம்பகதூர். அப்புறம் எனக்கு நல்ல தோஸ்த்தாயிட்டாரு.

நான் நினைச்ச மாதிரி வேலை இல்ல. என்னை தேஜ் பகதூர் பிளாஷ்டிக் பழசு எல்லாம் வகை பார்த்து தனித்தனியா பிரிக்கற வேலையில விட்டாரு. எனக்கு சரியாகச் செய்ய வரல. தினம் திட்டுதான். என்னடாது இப்படி வந்து மாட்டிப்புட்டமேன்னு நினைச்சப்ப தீதி ஞாபகம் வந்துடுச்சி. ஒரு மாசம் முடிஞ்சதும் ஒரு ஞாயிற்றுக்கிழமை கிளம்பி தீதியையும் சேட்டையும் பார்க்க போனேன்.

அங்கு ஒரு கடை இருந்ததுக்கு அடையாளம் சிறிதும் இல்ல. சுத்தமாக மண் எல்லாம் நிரவி புது வேலி வச்சி ரயில்வே சிம்பல் போட்ட போர்டு இருக்கு. பக்கத்தில் இருந்த கடைகளும் இல்ல. ரோட்டுக்கு மறுபுறம் இருந்த கடைகள் அப்படியே இருந்துச்சி. நான் அந்தப் பக்கம் போயி எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் விசாரிச்சேன். யாருக்கும் சரியா தெரியல. ஒரு பான்கடைல இருந்த பெரியவர் மட்டும், இங்கே இரண்டு நாள் தங்கியிருந்து கடை வைக்கப் பார்த்தாங்க தம்பி, போலிஸ் ரெய்டு வந்து எல்லாரையும் அடிக்க ஆரம்பித்ததும் போயிட்டாங்க, என்றார்.

தீதியிடம் சொல்லாமல் போனோமே என்று மனம் வேதனைப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் உள்ளே சென்று முன்பு அலைந்த இடத்தில் சுற்றிப் பார்த்தேன் ரயில் பாதையை அகலப்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருந்ததால் ரயில்கள் மிக மெதுவாக வருவதும் போவதுமாக இருந்தது. எப்போதும் தோன்றும், அம்மாவைப் பார்க்க வேண்டும், என்ற எண்ணம் அதிகமாகி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்க்கலாமா என்று முடிவு செய்ய முடியாமல் மிகவும் கவலை வந்து நேராக வழக்கமாக பார்க்கும் சினிமா தியேட்டர் சென்று படம் பார்த்துவிட்டு மாலை பிளாஷ்டிக் கம்பேனி போய் விட்டேன்.

என் பையை யாரோ பிரித்து ஏதோ தேடி இருக்கிறார்கள் ஆனால் இரண்டு வருடமாக நான் வாங்கிய சம்பளம் பணம் என் கால்சட்டையிலேயே வைத்து இருப்பேன். அது பத்திரமாக இருந்தது. அம்மாவை பார்க்க வேண்டும் என்ற நினைப்பை மாற்ற முடியவில்லை. அடுத்த வாரமே ராம்பகதூர் மூலமாக அவன் தம்பியிடம் இரண்டு வாரத்தில் வந்து விடுவதாகக் கூறிவிட்டு அலகாபாத் திரும்பினேன்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீடு செல்வதற்குள் ஒரு பக்கம் ஆர்வமும் அம்மாவைச் சந்திக்க பயமாகவும் இருந்தது. தூரத்தில் இருந்தே பார்த்து வரும்போது வீடு அருகே அம்மா நின்று ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்த இரண்டு வருடத்தில் மெலிந்து இருந்தார். நான் மெதுவாகத் தயங்கிச் சென்றேன். அந்தப் பெண் என் தங்கைதான். எனக்குதான் அவளை அடையாளம் தெரியவில்லை.

அவள் என்னைப் பார்த்ததும் கண்டுபிடித்து, அம்மா சோட்டாபாய்மா, என்று கூவி.என் கையைப் பிடித்து விட்டாள். அம்மாவுக்கு என்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீர். அவரது உணர்ச்சியும் முகபாவமும் எனக்கு புரிந்து விட்டது. எங்களை தவிக்க விட்டு சென்றாயே, என்று கேட்பது போல் இருந்தது.

அம்மா என்னைப் பார்த்து, ரொட்டிக்குதானே வீட்டை விட்டு ஓடினாய்?” என்று கேட்டார்.

அது உண்மைதான். ஆனால் பசிக்கு ஓடிய எனக்கு ஓட்டலில் வேலை செய்தபோது பசியே எடுத்ததில்லை. அதனால் எனக்கு பேச ஒன்றுமில்லை. பிறகு நடந்தது எல்லாம் ஒரு கனவு போல இருக்கிறது. சாப்பாட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் ஒரு மாதத்திற்கு வாங்கி வைத்து விட்டு அம்மா பேரில் ஒரு அக்கவுண்ட் பேங்கில் ஓப்பன் பண்ணி கையில் இருந்த பணத்தை போட்டுக் கொடுத்தேன்.

அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்த தங்கைகளை தையல் பழக சேர்த்து விட்டேன். அவர்களுக்கு அது அதிர்ச்சி. ஆனால் நன்றாக கற்றுக் கொண்டால் வீட்டிலேயே தைக்கலாம், வேலைக்குப் போக வேண்டாம், என்றதும் அவர்களுக்கு மகிழ்ச்சி வந்து விட்டது, தம்பி பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தான்

நீங்கள் நம்பமாட்டீர்கள், என் பதினாறு வயதில் நான் ஐம்பதாயிரம் சேர்த்து இருந்தேன். அம்மாவுக்கு நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சி. ஒரு போன் வாங்கிக் குடுத்து விட்டு வேலைக்கு விடைபெற்று திரும்பினேன்.

ஓட்டலுக்கு வரும் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்தும் அக்கம் பக்கம் நடப்பவற்றை கவனித்தும் ஒரு நாய் போல் இருந்தேன். காவலில் நன்றியோடும் அடிக்க வருபவரிடம் வாலை மடக்கி பம்மியும் தேவைப்படும்போது கோவத்தில் குறைக்கவும் பழகி இருந்தேன்.

வீட்டுக்குச் சென்று வந்த பிறகு எனக்கு வாழ்க்கை மேல் சிறிது நம்பிக்கை வந்திருந்தது.

பிளாஸ்டிக் கம்பேனிக்கு திரும்பியதும் தேஐ் பகதூர் முன்பணம் வாங்கிக் கொண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டால் தன்னிடம் வேலை பார்க்கலாம், இல்லை என்றால் வேறு சேட்டு பார்த்துக்கொள், என்றார். எனக்கு முன் பணம் வேண்டாம், மாதம் மாதம் கொடுத்தால் போதும், என்றதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

நான் உள்ளுரிலிருந்து வேலைக்கு வருபவர்களுடன் சேர்ந்து கொண்டு தினக்கூலிக்கு வேலை செய்தேன்.

தேஜ்பகதூர் என் மேல் வஞ்சம் கொண்டு பார்க்கும்போது எல்லாம் தலையில் தட்டுவதும் திட்டுவதுமாக இருந்தான். நான் அவனைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட பதுங்கி வேலை செய்தேன். ஒரு நாள் என்னை, நீ ஒரு அலி, என்று சொல்லி அவன் திட்டிப் பேசும்போது என்னுடன் வேலை பார்ப்பவர்கள் பார்த்து வீட்டனர். பைய்யா என்று ஆரம்பித்து, கண்ணீரோடு அவன் தினம் வம்பு செய்வதைச் சொன்னதும் அவர்கள் அவனை அடிக்கப் போய் பெரிய பிரச்சினையாகிவிட்டது.

அதற்குப் பிறகு அவன் என் பக்கம் வருவது இல்லை. பிறகுதான் அவனது உண்மை சொருபம் தெரிந்தது. முன்பணம் கொடுத்து ஆட்களை கொத்தடிமை போல் வைத்திருக்கிறான் என்றும் நேபாளி பெண்களை வேலைக்கு கொண்டு வந்து பாலியல் தொழில் செய்வதாகவும் தெரிந்து கொண்டேன்.

அவன் இருக்கும் திசைக்கே போகாமல் அந்த கம்பேனியிலேயே பிளாஷ்டிக் தரம் பிரிக்க ஆரம்பித்து மோல்டு செய்வது, பேக்கிங், பைப் பிட்டிங் செய்து பிரசர் சோதனை செய்வது என்று சிறிது சிறிதாக ஒவ்வொரு வேலையும் கற்று பிளம்பிங் பார்ட்ஸ் செய்யும் மெஷின் ஆப்பரேட்டிங் கத்துக்கொண்டேன். சரியாக ஓரு வருடத்திற்குப் பிறகு எனது பதினெட்டு வயதில் ஆப்ரேட்டர் ஆனேன். சம்பளம் இரண்டு மடங்கு ஆகியது. நாய் மாதிரி எப்போதும் வேலை செய்வதால் என்னை நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை

ஓட்டலில் வேலை செய்யும்போது காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை செய்து பழக்கம். அதனால் எநத வேலை கொடுத்தாலும் நேரம் பார்க்காமல் செய்தேன். அதற்கு மேற்கொண்டு ஒரு தொகை பணம் கிடைக்கும்.

அங்கேயே இருந்து நன்றாக சம்பாதித்து இரண்டு தங்கைகள் திருமணமும் என் திருமணமும் நடத்தினேன். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. சரியாக இரண்டு வருடம் ஆகிறது, நான் ஊருக்குச் சென்றபோது நண்பன், “என்னையும் வேலைக்குச் சேர்த்து விடு,” என்று கேட்டு வந்தான் அதில் உள்ள கஷ்டங்களைச் சொன்னேன். அவன் புரிந்து கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து கூடவே நின்றதால் அழைத்து வந்து சேர்த்து விட்டேன்.

ஒரு வாரம் ஒழுங்காக வேலை பார்த்தான். வாரச் சம்பளம் வாங்கியவுடன் வேலைக்கு வரவில்லை. நன்றாக குடித்துவிட்டு உடம்பு வலி நாளைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு காசு கையிலிருக்கும் வரை வேலை செய்ய வில்லை. அது மட்டும் இல்லாமல் தேஜ்பகதூரின் ஆட்களோடு அவன் பழகுவதைப் பார்த்துவிட்டு கோபம் வந்து அங்கெல்லாம் போகக்கூடாது என்று கண்டித்து என் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பிறகு வேலை செய்ய ஆரம்பித்து அந்த வார சம்பளம் வாங்கியவுடன் நண்பனை கையோடு அழைத்துச் சென்று டிக்கெட் எடுத்துக் கொடுத்து, நீ பத்திரமாக ஊர் போய்ச் சேர், எனக்கு நிறைய கடன் இருக்கு இந்த மாதிரி குடிப்பது என்றால் ஊரிலேயே வேலை பார்த்து உன் மனம் போல் செய், என்று சொல்லி வந்து விட்டேன்.

ஆனால் அவன் போகவில்லை. இரவே திரும்ப வந்து தேஜ்பகதூரிடம் இருந்த ரூபா என்ற பெண்ணை இரவோடு இரவாக கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.அவர்கள் குழுவாகச் சேர்ந்து என்னை மிரட்டி அவனது அட்ரஸ் மற்றும் போன் நம்பரை கேட்டனர்.

நேற்றே அவனை ஊருக்கு அனுப்பிவிட்டுதான் இரவு திரும்பினேன், அவன் திரும்பிவர வாய்ப்பு இல்லை நீங்கள் சொல்வதை நம்ப முடியாது, என்று சொன்னவுடன் தேஜ்பகதூரும் அவனது ஆட்களும் என்னை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்

காலை நேரம் ஆதலால் வேலைக்கு வந்த ஆட்கள் தடுத்து விலக்கி விட்டனர். அதற்குள் என் முகமெல்லாம் குத்தும் அடியும் வாங்கியதில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. கூட்டம் கூடியதில் தேஐுக்கு வேண்டிய ஆட்களே அதிகம். எல்லோரும் கூடி தேஜூவின் பெண்ணைக் கொண்டு வந்து விட்டு நஷ்ட ஈடும் கொடுத்தால் அங்கு வேலை செய்யலாம், இல்லை என்றால் நடப்பவற்றுக்கு நாங்கள் பொருப்பில்லை, என்றனர்.

பெண் விஷயமென்பதால் யாரும் உதவ முன்வரவில்லை. தேஜ் என்னிடம் உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் வந்து விடவேண்டும் இல்லை என்றால் நான் உன்னை விடமாட்டேன், என்றான்.

அதற்குள் நிர்வாகத்துக்கு தெரிந்து வந்து விட்டார்கள். ஒரு மணி நேரத்தில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றனர். பெண்ணைக கொண்டு ஒப்புவித்தால் உனக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்கும், இல்லை என்றால் அந்தப் பணம் முழுவதும் அந்த பெண் குடும்பத்தினருக்கு கொடுத்து விடுவோம், என்றனர்.

தேஜ்பகதூருக்கு மேல்மட்டம் அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அவன் மூலமாக நேபாளி் குடும்பங்கள் கொத்தடிமையாக வேலை செய்து வந்ததால் என் பேச்சைக் கேட்க யாரும் இல்லை. என்னிடம் பிரியம் காட்டிய இரண்டொருவர், தாமதிக்காமல் போய்ப் பார்த்து அழைத்து வா, என்றனர்.

அதுநாள் வரை வேலையைத் தவிர வேறு எதிலும் ஈடுபடாமல் சேணம் கட்டிய குதிரை போல் இருந்த எனக்கு நண்பனின் செயல் மிக அதிர்ச்சியளித்து மனம் நம்ப மறுத்தது.

அவன் அப்படி செய்திருக்கக்கூடாது. நாம் அவனை அழைத்து வந்து நம்ப வைப்போம் என்று கிளம்பினேன். ரயிலில் வரும்போது வெகு நாட்களுக்குப் பிறகு பசி தெரிந்தது. கதவு ஓரம் நின்று வெளிப்புறம் பார்த்துக் கொண்டு வந்தேன். எதிர்காற்று முகத்தில் அடித்தபோது முகமெல்லாம் அடி வாங்கியதில் வலி தெரிந்தது. நான் யாரையும் அடித்தது இல்லை. காலமெல்லாம் அடி வாங்கவே பிறந்து இருக்கிறோமோ என்று வருத்தத்தில் அப்படியே எதிர்ப்புறம் சென்ற ரயிலில் ஒரு நொடி பாய்ந்து விடலாமா, என்று தோன்றியது.

திரும்பி உள்ளே சென்று கண்ணை மூடி அமர்ந்து விட்டேன். அந்தப் பெட்டி முழுவதும் பீகாரிகள் ஏறியிருந்தனர் எல்லோரும் கட்டிடத் தொழிலாளர்கள். குஜராத்தில் வேலை செய்வதற்கு வந்து கொண்டிருந்தனர். நீரைத் தேடும் வேர் போல அவர்கள் செல்லும் இடம் பற்றியும் வேலை பற்றியும் தெரிந்து கொண்டேன். மனம் நிலையில்லாமல் தவித்தது நண்பனைப் பார்த்தால் நன்றாக திட்டி, அடித்தாலும் ஆத்திரம் தீராத ஆவேசம் உள்ளே கனன்று கொண்டு இருந்தது.

மறுநாள் மாலை அலகாபாத் இறங்கி நேராக நண்பன் வீட்டிற்கு சென்றேன். வாசலில் அவன் அம்மா அப்பா அமர்ந்திருந்தனர் என்னை, வா பேட்டா, என்று அழைத்து அமர வைத்தனர்.

பேட்டி, பேட்டி…, என்று நண்பனின் அம்மா அழைத்ததும் உள்ளே இருந்து நல்ல மங்களகரமான முகத்துடன் வெளியில் வந்த பெண் முகம் என்னை கண்டதும் வாடி விட்டது. நான் புரிந்து கொண்டேன்

“சஞ்சய், இங்கே பாரு எவ்வளவு அழகாக இருக்கிறாள். இது போல் மருமகள் எனக்கு கிடைக்க நான் எவ்வளவு தவம் பண்ணியிருக்க வேண்டும்! எல்லா வேலையும் செய்கிறாள். என் மகன் அதிர்ஷ்டக்\காரன்,” என்றார் அம்மா.

“பேட்டி, அண்ணனிடம் ஆசி வாங்கிக் கொள்,” என்று சொன்னதும், “சதா சுகி ரோ” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.


Filed under: எழுத்து, சிறுகதை, வேல்முருகன் தி

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!