சித்தார்த்தனின் சொப்பனத்தில்
எப்போதும் போல இன்றும்
மாறாமல் வந்துவிட்டது
அந்தக்காட்சி,
என்றும் ஈரம் தாங்கிய
பூக்களின் நறுமணமாய்
பதியமாகிப் போன
சுசீலாவைப் பற்றிய
புன்னகைக்குறிப்புகளில் ஒன்று.
மழைக்கு பிந்தைய
அதிகாலைப் பொழுதொன்றில்
வீட்டின் அருகிருந்த
புல்வெளிக்காட்டில்
சிறு சிறு
வெண்குடைக்காளான்களை
ஓடி ஓடித்தேடி
மண்ணைத் தோண்டி
அடித்தண்டு வேர்முறியாமல்
பறித்ததில் சிதறிய
அவளுடைய கொலுசின்
சிணுங்கல்கள் மீட்டும்
வெள்ளி மணிகளின்
சமிக்ஞையை போல.
Filed under: கவிதை, பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி Tagged: கவிதை, பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
