சங்கர நாராயணன்
வீடு மாறும் தோறும் தங்கிவிடுகின்றன
தாபத்தின் நிழல்கள்
பால்யத்தில் குடியிருந்த வீடுகள்
பார்ப்பதற்கே அச்சமாக இருக்கின்றன
வடக்குரத வீதிக்குச் நேற்று சென்றேன்
அவளுக்காக நான் பிதற்றிய வார்த்தைகள்
பல்கிப்பெருகி பித்தேறிய கண்களுடன் அலைகின்றன
அவ்வீட்டின் உள்ளறைகளில்
உள்ளங்கையில் குளம் தோண்டி
நான் புதைத்த குழந்தைகளின் பேரோலம்
எத்தனை முயன்றும்
காணமுடியவில்லை
நான் வாழ்ந்த வீட்டினை
கால்முளைத்து நடந்து செல்லும் வீடுகளில்
பறக்கத் துடிக்கின்றன வேட்கைப்புறாக்கள்
இடையறா வாசத்தில்
அறைகளின் சுவர்களில் படிந்துள்ளன
மனித இச்சைகளின் பாசிப்படலம்
கடந்துசெல்லும் வீடுகள் கூட்டிவருகின்றன
கடக்க இயலா காலத்தின் சுமையை
Filed under: கவிதை, சங்கர நாராயணன், சங்கர நாராயணன்
