இலைகள் விழுந்து சருகாவதிலும் சருகாகி காற்றில் வீழ்வதிலும் நியதிகள் எங்கும் மீறப்படாதபோது கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து சுடர் அடங்கி அணைந்தாலும் ஒற்றை விளக்கின் திரியிழுத்து இருளின் கருமையில் இணைந்தாலும் புலரியின் பொலிவு குறைபடாதபோது சொற்களின் குறைவில் பிறந்தாலும் மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் கவிகளின் வீச்சு கறைபடாதபோது அலை வீசி ஆர்ப்பரித்து கரை தாண்டி சென்றாலும் கால்தடவி கலம்தாங்கி கட்டுக்குள் நின்றாலும் ஆழியின் அற்புதம் புரிபடாதபோது அனைத்தும் ருசிக்க அனைத்தும் புரிய அனைத்திலும் இழுபட அனைத்திலும் இழிபட நான் காத்திருப்பதில் தவறென்ன?
Filed under: எழுத்து, கவிதை, சரவணன் அபி Tagged: கவிதை, சரவணன் அபி
