‘உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே வச்ச பொருளின் வகையறிவாரில்லை’
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இது தத்துவத்திற்கான சமயமில்லை. தப்ப வேண்டும், நாம் அனைவரும் தப்ப வேண்டும், உயிர்களென, இருப்பதே நாம் நால்வர்தான்.”
‘மேவிய சீவன் வடிவது சொல்லிடின்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்தில் ஒன்றே’
“உயிர் போகப் போகும் நிலையில் நல்ல தமிழைச் சொன்னதற்கு நன்றி. உலகத் தலைவர்களிலேயே எஞ்சியுள்ள ஒருவர் நம்முடன் இருக்கிறார், அவர் காப்பாற்றப் பட வேண்டும்.”
தலைவர் இடைபுகுந்தார். ‘நம்மில் இளையவன் விமலன். அவன் தாவிக்குதித்தேறி தப்பிக்கட்டும். இது என் கட்டளை.’
அவர்கள் பூமியின் விளிம்பில் நின்றார்கள். மூச்சிற்குத் தவித்தார்கள். மாசு அதிகரித்த காற்று நீலமும், செம்மையுமான புழுதியை வாரி இறைத்தது. கடலலைகள் பூமியை அறைந்து பெயர்த்தெடுக்கத் தவித்தன. போர்கள், உயிர்களைக் கொல்வதற்கு கிருமிகளைப் பயன்படுத்திய போர்கள், இரு நாடுகளின் பகைமையில் உருவான ஒன்று, உலகையே இரு கட்சிகளாகப் பிரித்து பூண்டோடு உயிர்க்குலங்கள் அனைத்தையும் அழித்த போர்கள், மனிதனின் அகங்காரத்தின் விளைவு. அவன் பயன்படுத்திய நச்சு வாயுக்கள் அனைத்து உயிர்களையும் அழித்துவிட்டன. வானில் ஏறும் ஏணி என்ற உடை வடிவமைப்பில் அவர்கள் நால்வரும் பூமியின் மேலே புரண்டு தப்பித்து இன்று விளிம்பிற்கு வந்துவிட்டார்கள். ஜப்பான் நாடு முதன் முதலில் இவ்வகை ஏணிகளைப் பயன்படுத்தியது.
ஏணி என்ற வடிவமைப்பே மடங்கும் நீளும் வகையினால் உயிரிகளின் மூலக்கூற்றின் கட்டமைப்பை ஒத்தது.
‘தனியாக நான் எங்கு செல்வது? உங்களுடனே இருந்து விடுகிறேன்; இல்லை, இறப்பதற்காகச் சேர்ந்து இருப்போம்.’
‘விமலன், மனிதன் இருக்க வேண்டும் என்றென்றும். இயற்கையின் ஆற்றல் மிக்கப் படைப்பு மனிதன்தான். அவன் விண்ணிலிருந்து மண்ணைப் படைப்பான். செய், முயற்சி செய், போராடிச் சாவதில் மேன்மை உண்டு. மேலே போ, உயிரை உற்பத்தி செய்’
‘கழுகுபாட்டை’ இயக்கினான் விமலன். தொற்றி வான்வெளியில் ஏறினான். எங்கே போய் எதைத் தேட, யாருக்காக, எந்த உயிரை அவன் உற்பத்தி செய்ய? எப்படி முடியும்? நியுக்ளியஸ்ஸிற்குள் டி என் எவைச் சுற்றி வைத்திருப்பது எத்தகையதொரு தொழில் நுட்பம்! ஓரு சிறு தேனீர்க் கரண்டியில் உள்ள டி என் எவைக்கொண்டு எத்தகையதொரு பெரிய உலகம், அதன் வெவ்வேறு உயிரிகளைப் படைக்கலாம்! எத்தனைத் தகவல்களைச் செலுத்தலாம் தன்னையே அதனால் நகலெடுக்க முடியுமே! டி என் எவின் ஒற்றை இழையான ஆர் என் எ, எத்தனைத் திறமையாக ரைபோசோம் மூலம் புரதத்தைத் தருகிறது. ஜீனோம் சாதுர்யமானது; சரியான சூழலில் தன்னையே நகலெடுக்கும் திறன்; எல்லாம் சரி, ஆனால் அவன் எப்படி உயிரை உருவாக்குவான்? திசையற்ற பயணத்தில் செல்வதாகத் தோன்றியது அவனுக்கு!
சிற்றெறும்பை உருவாக்க முடியுமா மனிதனால்? ஒரு திசு உயிர் வாழ குறைந்தது மூன்று சிக்கலான மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டி ஆக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம், ரைபோ நியூக்ளிக் அமிலம், புரதங்கள். இவற்றை அவன் எங்கே தேடுவான்? முதலில் அவன் வானில் ஒரு இடத்தில் இறங்க வேண்டும். எந்த இடம்? விண்வெளிக் கூடங்களும், இடையில் நிறுவிய விண்வீடுகளும் எங்கே?
அவன் பறக்கும் அந்த ‘பாட்’ திடீரெனத் தாமதிக்கத் தொடங்கியது. அது ஏதோ ஆபத்தை எதிர்நோக்குகிறது. மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் ஆபத்துக்கள், அபாயங்கள். அவன் ‘பாட்’டின் செயல் வேகத்தைக் கூட்ட முயன்றான். இல்லை, பலனேதுமில்லை.
ஒரு சுழலும் கோளினுள் இழுக்கப்பட்டதுதான் அவனுக்கு நினைவிலிருக்கிறது.
*******
சரயூ நதிக்கரை. மண்ணைப் பிசைந்து முட்டையும், முத்தும் கலந்து செறிவூட்டப்பட்ட அரண்மனைக் கட்டிடங்கள், அந்தப்புரங்கள். தாமரை இதழ் அடுக்குகள் போல் மையத்திலிருந்து விரிந்து நாற்சந்திகளில் இணையும் வீதிகள். கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட அரங்கநாதனின் ஆலயம் மிக எடுப்பாக நின்றது. சுற்றிலும் சிறு சுதை உருவங்கள் அமைந்த கோயில்கள். நீர்நிலைகளும், பூங்காக்களும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதப் பயிற்சிக் கூடங்கள், நடன சாலைகள், விவாதக் கூடங்கள் தனித்தனியான கட்டட அமைப்பு கொண்டிருந்தன. தலைநகரம் என்பதால் வணிகர்களும், தொழில் செய்வோரும் தெருக்களில் நடமாடிக்கொண்டேயிருந்தனர். கழனிக் காடுகளில் சாய்ந்தாடும் நெற்கதிர்கள், ஏற்றப் பாடல்கள், மண்சட்டிகளில் வடித்த கஞ்சியில் தாளிதம் செய்து சேர்த்த காய்கள், மீன்கள்.
கணிகையர் இல்லங்களுக்குச் சென்று மகிழ்வதில் தான் சத்தியவிரதனுக்கு இன்பம். அவர்கள் அவனுடைய அரண்மனைக்கே வரும் நியதி இருக்கிறது. அவனுக்கு அவர்களின் இல்லச் சூழல்தான் உவப்பானது. உடலைக் கொண்டாடும் உன்மத்தம் பெருகும் இடம். அரசரான தந்தை திரியருனிக்கு தன் மகனின் செயல் எதுவும் பிடிக்கவில்லை. வசிட்டர் செய்யும் எந்த உபதேசமும் அவனுக்குப் புரியவில்லை. அவன் பார்வையில் தந்தையோ, குருவோ மானுட உணர்ச்சியே அற்றவர்கள்.
எத்தனை முயன்றும் சத்தியவிரதனால் தன்னை உடலாக மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. இக்ஷ்வாகு குலத்தின் இளவரசன். ஆடியில் காணும் அழகிய பிம்பமன்றி அவன் வேறு யாராக இருக்க முடியும்? இந்த உடல், அது உணர்த்தும் போகங்கள், அது அனுபவிக்கும் இன்பங்கள், அதுவன்றி ஏதோ இருக்கிறதாம் உள்ளே, என்ன ஒரு கதை இது! அவன் தன் உடலுடன் தான் சொர்க்கத்திற்குச் செல்வான்.
இதற்கு உதவி செய்ய மறுத்த வசிட்டரின் பசுவை அவன் கவர்ந்து கொன்று தின்று பசியால் வாடுவோருக்கும் பகிர்ந்தான். அதில் விஸ்வாமித்திரரின் குடும்பமும் அடக்கம். ஆனால், வசிட்டர் சாபம் கொடுத்து அவனை ‘திரிசங்கு’வாக்கிவிட்டார்.
அழகிய அவன் உடல் எத்தனை அருவெறுப்பாகிவிட்டது! காண்போரெல்லாம் அவனைத் தவிர்த்தனர். அவன் தந்தை அவனைக் காட்டிற்கு விரட்டிவிட்டார். அவன் தன் அழகிய உடலை மீண்டும் பெறத் தவித்தான். மேலே அமுதம் கிடைக்கையில் அவன் அழகின் இலக்கணமாகிவிடுவான். அவன் சுந்தரன்; ஆம், அவனை உடலுடன் விஸ்வாமித்திரர் சொர்க்கத்திற்கு அனுப்பினார். இந்திரன் அனுமதி மறுத்து கீழே தள்ள, முனிவர் மேலே அனுப்ப நல்ல இழுபறியில் சிக்கிக்கொண்டான் திரிசங்கு. தேவேந்திரனுக்குச் சவாலாக ஒரு சொர்க்கத்தைக் கட்ட ஆரம்பித்து விண்மீன்களையும் படைக்கத் தொடங்கினார் முனிவர். பயந்த இந்திரன் வரம் பல தருவதாகவும், கட்டப்பட்ட அந்த சொர்க்கத்தில் திரிசங்கு இருக்கலாம் என்றும், மேலே புது உலகத்தை உருவாக்க வேண்டாமென்றும் வேண்டினார். அதன்படி திரிசங்கு தனக்கென, தன் உடலுடன் தன் சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருக்கிறான்.
*******
விமலன் அந்தத் தொங்கும் சொர்க்கத்தில், அயோத்தியின் இளவரசனான ஒருவனை இத்தனைத் தனிமையில் எதிர்பார்க்கவேயில்லை. நிலையில்லாது சுற்றி வருகிறர் அவர்; வானிலும் இல்லை, பாவம் திரிசங்கு மண்ணிலுமில்லை.
விமலனும் கூட உடலோடு சொர்க்கம் வர ஏங்கியவன் என்று அனுமானித்துக் கொண்டான் திரிசங்கு. அது அவனுக்குத் தேவையான உண்மை என்றே நம்பினான். விமலன் எங்கிருந்து வந்திருக்கிறான், எதற்காக வந்திருக்கிறான் என்பதிலெல்லாம் திரிசங்குவிற்கு ஆவலில்லை. ‘இவன் மனித உருவில் இருக்கிறான், அது ஒன்றே போதுமானது. தனிமையாய் எத்தனைக் காலம்;ம்…முனிவர் நல்லவர், இவனை அனுப்பிவைத்துள்ளார். இவனும் அமிர்தம் எடுத்துக்கொள்ளட்டும். நிரந்தரமாகத் என்னுடன் இருக்கட்டும்.’
விமலனோ சிந்தித்தான். ‘இவன் திரிசங்குவாக இல்லாமல், திரிசங்கியாக இருந்தால் உயிரின் தொடர்ச்சியைக் கொண்டு வந்து விடலாம். அதற்கு வழியில்லையே. பெண் சக்திமிக்கவள்; இருவராகப் பிரித்துச் சதி செய்த சிவன் தன்னுடனே சக்தியைப் பாதியாக வைத்துக்கொண்டு பிரியாமல் ஒன்றாக நின்றுவிட்டான்!’
ஆனால், ஜெனோபாட்டில் உள்ள திசுக்களை வைத்து ஏதாவது உண்டாக்கப் பார்க்கலாம். ஆனால், எதில் உருவாக்குவது, நொதிகளுக்கு எங்கே போவது? ராபர்ட் ஷப்பைரோ சொன்னாரே-உயிரின் எல்லா அடிப்படைக் கூறுகளையும் உண்டாக்க முடியும்-அவை விண்கற்களிலும் இருக்கின்றன. இந்தக் கோளில் விண்கற்கள் இல்லாமலா போய்விடும்? உயிரிலித் தோற்றம் எளிய கரிமச் சேர்மத்திலிருந்து, அதாவது,உயிரற்ற பொருண்மத்தில் இருந்து உயிர் இயல் நிகழ்வாகத் தோன்றியது அல்லவா?
திரிசங்கு சொர்க்கம் சுழன்றுகொண்டிருக்க அவர்கள் இருவருமே சுழற்சியின் விசையை உணர்ந்து கொண்டிருந்தார்கள். பூமி சுழல்வது உடலால் உணரப்படும் ஒன்றல்ல; ஆனால்,இது அவர்களைச் சற்று தள்ளாடச் செய்தது. பழக்கத்தின் காரணமாக திரிசங்குவின் சமனிலை மாறவில்லை.முட்டி உருண்டவன் விமலன் தான்.இத்தனையிலும் வியப்பான ஒன்று, திரிசங்குவின் இளமை.அதைச் சொன்ன போது அவன் விரக்தியாகச் சிரித்தான்.
“விமலா, என்னைப் போல் உடலைக் கொண்டாடியவன் யாருமில்லை. உடல் தான் நான்.அதன் இன்ப ஊற்றுகளை அறியாமல் பிதற்றுகிறார்கள். ஆனால்,தனிமையில் இந்த உடலினால் என்ன பயன்? வரம் கேட்கக்கூட தெரியாத முட்டாள் நான்.”
‘ஏன் அமிர்தம் உங்களுக்கு நிறைவளிக்கவில்லையா?’
“மழுங்கடிக்கும் நிறைவுதானது, அனுபவித்த நிறைவா அது? அது போகட்டும், விஸ்வாமித்திரர் உன்னை அனுப்பிவைத்தாரே, அந்தக் கருணைக்கு நான் என்ன செய்வேன்? உன்னை அவரைப் போல் நடத்துவேன், உனக்கு என்ன வேண்டுமோ கேள், கிடைக்கும்; ஆனால், இல்லாததைக் கேட்காதே”
‘உங்கள் நட்பைத்தவிர எனக்கென்ன தேவை?’
“உன் உடைகள் நன்றாக இருக்கின்றன. நான் ஒரு முறை அணிந்து பார்க்கட்டுமா?”
‘எனக்கான ஆடைகள்?’ என்றான் விமலன்.
“என்னுடயதைப் போட்டுக்கொள். பயப்படாதே. என்னிடம் நச்சுக் கிருமிகள் இல்லை. உனக்கு நான் துளி அமிர்தம் கொடுத்திருப்பதால் உன் கிருமிகளும் கொல்லப்பட்டுவிட்டன.”
திரிசங்கு உடை மாற்றுகையில் அவனது மார்பிற்கும், வயிற்றிற்கும் இடையே மான் தோல் திரியில் ஒரு உருளையைப் பார்த்தான் விமலன். ‘அது என்ன, அவர் உடலோடு ஒட்டிய ஒன்றா, அது இந்த உலகத்தின் சிறப்பு அடையாளமா, அவரிடம் கேட்கலாமா, தன்னைத் தப்பாக நினைத்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டுவிட்டால்.. அப்படியெல்லாம் செய்ய மாட்டார், அவரே தனிமையில் தவித்துக்கொண்டிருக்கிறார். அவர் நட்பாகத்தானே பேசுகிறார்.’
அவன் சிந்தனையின் போக்கைப் புரிந்தவர் போல் அவர் சிரித்தார்.
“இது என்னவென்று தெரிய வேண்டுமா உனக்கு?”
‘நாங்கள் இடுப்பில் ஒன்று இப்படி கட்டிக் கொள்வோம், அதில் உருளையெல்லாம் இருக்காது; சிறு பையனாக இருந்தால் காசு கோர்த்து கட்டுவார்கள்.’
“விமலா, இதில் கல்ப லதிகா இருக்கிறாள்.”
விமலனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ஒரு பெண், அழகிய பெயருடன், ஒரு உருளைக்குள் அவன் தேடும் உயிரி, ஆனால், அவள் உயிருடனா இருக்கிறாள்? அவன் மனம் விம்மியது.
திகைப்புடன் அவரைப் பார்த்தான். திக்கித்திக்கி பெண்ணா என்றான்.
“அவள் சாதாரணப் பெண் இல்லை. சக்தி தேவதை. விரும்பும் வரம் தரும் கற்பகக் கொடி.”
‘அவள் உங்கள் இடையில் எப்படி?’
“பூமிக்கும், வானிற்கும் இழுபடுகையில் என் சக்தி குறைந்தது. அந்த நிலையிலும் பெண்களின் பால் ஆசையும் குறையவில்லை. உனக்கே தெரியும், நான் உடல் உபாசகன். விஸ்வாமித்திரர் தன் தவத்தினால் பெண்ணின் கருமுட்டையை உண்டாக்கி உருளையில் அதை வைத்தார். உன் சொர்க்கத்தில் அவள் உடன் வருவாள், உன்னிடம் வரும் அமிர்தத்தை நீ அவள் மேல் தெளி; கற்பகக் கொடியென உன்னைப் பிணைவாள், உன்னை ஆட்கொள்வாள், உன் தனிமையும் போகும் என்றும் சொன்னார்.”
விமலனுக்கு ஆவல் தாங்கவில்லை. ‘நீங்கள் அதையெல்லாம் செய்யவில்லையா?’
“செய்ய நினைத்தேன். ஆனால், மனம் வரவில்லை; மேலும், அவர் என் குரு. என்னைப் புரிந்து கொண்ட தந்தை அவர். அவர் உருவாக்கிய பெண் எனக்குத் தங்கை முறையல்லவா? நான் அவளை வெளிக் கொணர முயலவில்லை.”
விமலன் அப்படியே உருகிவிட்டான். ‘உடலைக் கொண்டாடிய இளவரசன், காமத்தில் முக்குளித்தவன், இடையில் ஒரு பெண், தனிமையில் தவித்தும் இருக்கிறார், அமிர்தமும் வைத்திருக்கிறார், ஆனால், என்ன ஒரு கட்டுப்பாடு?’
உடைகளைத் தந்தவர் உருளையைத் தருவாரா? அமிர்தம் வேண்டுமே அதைத் தருவாரா? கல்ப லதிகாவின் கரு முட்டைகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்குமா? சொல்லிப் பார்க்கலாமா, அவருக்கில்லை நமக்கென்று. வேண்டும் வரம் கொடுக்கும் அவள் மூலம் இங்கே உயிர்களைப் பெருக்கலாம். அவர் தந்தையெனப் போற்றும் முனிவர் அமைத்த இந்த உலகின் சக்ரவர்த்தியாக அவர் இருக்கட்டுமே.! அந்த விண்கற்களில் புரத நொதிகள் இருப்பதை நம் ‘பாட்’ சொன்னதே.
அவரிடம் கேட்டான். அவர் சிரித்தார்.
“நாம் கதை பேசிக்கொண்டேயிருக்கலாம். நீ சொல்வதெல்லாம் வியப்பானது. அரசர்கள் இல்லை என்கிறாய், செயற்கை அறிவு, செயலிகள், என்பதெல்லாம் நான் அறியாதவை. ஆனால், இப்போது பூமியும் இல்லை என்பதால் நீ என்னை விட்டுப் போக முடியாதல்லவா? அப்படித்தானே முனிவர் சொல்லியனுப்பினார்?”
‘நீங்கள் போக முடியவில்லை அல்லவா? என்னாலும் முடியாது.’
“நீ எங்கேயும் போக மாட்டேன் என்று சத்தியம் செய். கல்ப லதிகா உனக்குத்தான். ஆனால், பழைய விந்துவால் தான் அக் கரு முட்டையை அணுக முடியும். குறைந்தது பதினோரு மாதங்கள் அதற்கென்ன செய்வாய்?”
அவன் ஆவல் மீதூற அவரைக் கட்டிக் கொண்டான். ‘என் ஜீனோபாட்டில் உள்ள வித்திற்குப் பதினான்கு மாதங்கள் பூமியின் கணக்கில் ஆகிவிட்டன.உங்கள் கோள் தாழ் நிலையில்தான் உள்ளது. எங்கள் பதினான்கு உங்களுக்குப் பன்னிரெண்டாக வரும். புதிய பூமி. உடலின் நிறைவில் பொலியும் பூமி. உயிரிகள் பல்கிப் பெருகட்டும்.’
‘நீங்கள் என்னை நம்புங்கள். முழங்கும் சங்கின் ஒலி நிறைந்த உலகத்தைப் படைப்போம்.ஆனால், அவளுக்கு உருவம் உண்டா?’
“கிடையாது. அவள் கருமுட்டையில் ஒன்றைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு சமயத்தில். விண்கல் குடுவையுள் போட்டு விந்தினையும் அமிர்தத்தையும் தெளிக்க வேண்டும். அந்த கர்ப்பம் வளர்ந்து வெளி வருகையில் அவள் உயிருடன் எழுவாள். பின்னர் பெண்ணென நிலைப்பாள்.
புதுமையை உண்டாக்கப் போகும் பழமை. பார்க்கப்போனால் அப்படித்தானே அனைத்தும் உண்டாகியிருக்கின்றன. எதையோ மறைத்து எதையோ காட்டி…அப்பா பாடுவாரே..’மரத்தில் மறைந்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார்முதற் பூதம்.’
ஒருவித பரபரப்பில் அவர் இருக்கையில், அவர் அறியாமல் அவன் இரண்டு முட்டைகளை எடுத்து இரண்டு விண்கல்லிலும் பதுக்கினான். தன் ‘ஜெனோபாட்’டை அதனுள் இட்டு மூடினான். ஆனால், இருமைக்கு வித்திட்ட அவனைப் பார்த்து அவர் கோபத்தில் கத்தினார். செய்வதறியாது திகைத்தார். முனிவர் சபிப்பாரோ எனப் பயந்தார். அவன் இலட்சியமே செய்யவில்லை. தனிமையைச் சொல்லியே அவரை அவனால் வெல்ல முடியும்.
அவனுக்குத் தெரியும்- அதனுள் ஜெனோ நிச்சயமாகத் தன் படைப்பினைச் செய்யும். அது எந்த உயிராயினும் சரி-ஒரு செல், ஒரு ஒட்டுண்ணி, அல்லது செடி,அல்லது ஏதாவது? அப்படியெல்லாமில்லை, அது மனித வித்துதானே? ஆனால் அவள் கொடியாயிற்றே, எதைப் படைப்பாள், எல்லாவற்றையுமா?
விண்கல் தாமரையென விரிந்தது. அதனுள் புரத ஓட்டங்களின் சுவடு போல் ஒன்று தெரிந்தது. விமலன் தவித்தான், அதையே எண்ணிக்கொண்டிருந்ததால் சுவடும், அசைவு போல் ஒன்றும் தோன்றியதோ? பின் அது நின்று போனதையும் பார்த்தோமா அல்லது இல்லையா?
நடுங்கும் குரலால் திரிசங்கு சொல்லலானார் :
‘பூர்ணமத, பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதஸ்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே’
ஒரு செல் தன்னை நகலெடுக்கத் தொடங்கியது. சுற்றும் கோள் ஒரு நீள்வட்டத்தைத் தெரிவு செய்தது. பூமியின் சூரியன் இங்கே தென் கிழக்கில் வருணனாக, இந்திரன் கிழக்கில் சூரியனாக, காற்று தென் மேற்கில் இடம் பிடிக்க, நெருப்பு வடக்கில் எழ புதிய வானம், புதிய உயிர், புது வாழ்க்கை. தங்கள் கண்களின் முன்னே அகிலத்தின் ஒரு பகுதியாக திரிசங்குவின் கோள் 21 வினாடிக்குள் வளர்ந்ததை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். விமலன் அறிந்த பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக பல்வேறு உயிரிகள் ஒரே நேரத்தில் தோன்றின.ஒத்த அம்சம் கொண்ட ஒரே மூதாதைதான் என்ற டார்வினின் கோட்பாடு சிதறுவதைப் பார்த்தான் அவன். சரியே, வௌவாலுக்கு அறிந்த மூதாதை என எதுவுமில்லையே! ஒரு செல் உயிரினம் ஓடி ஒளிந்து கொள்ள வானதியில் மீன்கள் துள்ளுவதை அவர்கள் பார்த்தார்கள். கண்களில் நீர் பெருக திரிசங்கு முதியவனாக சிலையெனச் சமைந்தார்.