1959இல் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பை முடித்தார் ஓர் இளைஞர். போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு வேலைக்கு எளிதாகச் செல்லும் தகுதி அவருக்கு இருந்தது. ஆனால் அவருக்கு அரசு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அவருக்குள் ஊறியிருந்த எழுத்தார்வம் அவரைத் தடுத்தது. தன் மனத்துக்குப் பிடித்த எழுத்தாளரும் பேராசிரியருமான மு.வரதராசனாரை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்டார். வாழ்க்கையை நடத்த ஒரு வேலையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதலாமே தவிர, எழுத்துத்துறையிலேயே வாழ்வது சரியல்ல என்று ஆலோசனை வழங்கினார் அவர். அப்போதும் அந்த இளைஞர் அரசு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து கல்லுப்பட்டி காந்திநிகேதனில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் மா.பா.குருசாமி.
கல்லுப்பட்டியில் தங்கியிருந்த ஜே.சி.குமரப்பாவின் தொடர்பு அவருடைய பொருளாதாரம் பற்றிய கருத்துகளை மெருகேற்றிக்கொள்ள உதவியது. அவர் எழுதிய பணம், வங்கி, பன்னாட்டு வாணிபம், பொதுநிதி இயல்கள் ஒரு முக்கியமான புத்தகம். கல்லுப்பட்டி ஆசிரமத்திலிருந்து அவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியச் சென்றார். மதுரைப்பல்கலைக்கழகம் காந்தியக்கல்வி என்னும் துறையைத் தொடங்கியபோது, அதில் பணியாற்றுவதற்காக மு.வ.வின் அழைப்பின் பேரில் சென்றார். அங்கிருந்தபடியே வள்ளலார் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று திருச்செந்தூர் கல்லூரிக்கே பேராசிரியராகத் திரும்பி வந்தார். அங்கேயே முதல்வராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். பணிக்காலத்திலும் அதற்குப் பிறகான ஓய்வுக்காலத்திலும் காந்தியம் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதினார். காந்தியடிகளும் கார்ல்மார்க்சும் அவருடைய சிறந்த ஆய்வுநூல்.
நான் கண்ட மாமனிதர்கள் மா.பா.குருசாமியின் நூல்களில் மற்றொரு முக்கியமான நூல். அவருடைய நினைவலைகள் வழியாக விரிந்தெழும் பதினாறு ஆளுமைகளைப்பற்றிய சித்திரங்கள் இந்த நூலில் உள்ளன. காந்தியத்தில் தோய்ந்த ரா.குருசாமி, க.அருணாசலம், கோ.வேங்கடாசலபதி, ஜெகந்நாதன், வீ.செல்வராஜ், க.ரா.கந்தசாமி, ஜீவா, லியோ பிரவோ போன்றவர்களும் இப்பட்டியலில் அடக்கம். அவர்கள் தனக்கு அறிமுகமான விதத்தைப்பற்றிய சித்தரிப்போடு தொடங்கும் ஒவ்வொரு கட்டுரையும் அந்த ஆளுமைகள் செயல்பட்ட விதங்களையும் அவர்கள் ஆற்றிய சேவைகளையும் கோர்வையாகப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. இவர்களுடை வாழ்க்கை வரலாறுகள் தனிநூலாகவே எழுதப்பட வேண்டியவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டியவை. இவர்கள் வழியாகவே இலட்சியவாதம் அடுத்த தலைமுறைத் தொட்டு வளரவேண்டும்.
லியோ பிரவோ அபூர்வமான ஒரு ஆளுமை. பெல்ஜியத்தில் பிறந்து இந்தியாவுக்கு வந்து முப்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி மறைந்தவர். இங்கு வாழ்கிறவர்களே தமக்கு அருகில் வாழ்கிற சகமனிதர்களைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஒதுங்கி வாழ்கிற சூழலில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு அவர்களைச் செல்லத் தூண்டிய விசைக்கு இலட்சியவாதம் என்னும் பெயரை அன்றி வேறெந்த பெயரைச் சூட்டமுடியும்? மா.பா.குருசாமி பிரவோ பற்றி எழுதியிருக்கும் நினைவலைகள் இந்த நூலின் மிகமுக்கியமான பகுதி.
லியோ பிரவோ பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், அவருடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய ஜோசப் ழீன் லான்சா டெல் வாஸ்டோவைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இத்தாலியில் தத்துவ இயல் படித்தவர். கவிஞர். காந்தியடிகளைப்பற்றி ரோமன் ரோலண்ட் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு காந்தியடிகளைச் சந்திப்பதற்காக 1936இல் இந்தியாவுக்கு வந்தார். ஏறத்தாழ ஆறுமாத காலம் காந்தியடிகளோடு தங்கி, அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று, அவருடைய செயல்பாடுகளைக் கவனித்தார். காந்தியடிகள் அவருக்கு சாந்திதாஸ் என்று பெயரிட்டார். அகிம்சைப் போராட்ட வழிமுறைகளைப்பற்றி தனக்கெழுந்த ஐயங்களையெல்லாம் காந்தியடிகளுடன் உரையாடித் தெளிவு பெற்றுக்கொண்டு இத்தாலிக்கு திரும்பிச் சென்றார் சாந்திதாஸ். தன் இந்திய அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.
காந்திய வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த சாந்திதாஸ் ஆர்க் சமுதாயம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். அவர் நினைத்த அளவுக்கு அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எல்லாக் குறுக்கீடுகளையும் கடந்து ஒத்த சிந்தனையுடையவர்களைத் திரட்டி அந்தக் குழுவை அவர் ஏற்படுத்தி அகிம்சைப்போராட்ட வழிமுறையைப்பற்றிய நம்பிக்கையை மக்களிடையே விதைத்தார். 1954இல் மீண்டும் இந்தியாவுக்கு வந்து வினோபாவுடன் பூமிதான யாத்திரையில் கலந்துகொண்டார். 1957இல் அல்ஜீரியப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆர்க் சமுதாயத்தின் சார்பில் மக்களுடன் இணைந்து கொடுமைக்கெதிரான அமைதிப்போராட்டத்தை முன்னெடுத்தார். காந்தியடிகளின் வழியில் பிரான்சு அரசு நிறுவ திட்டமிட்டிருந்த அணு உலைகளுக்கு எதிராக, கண்டனத்தைத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களிடையில் விழிப்புணர்ச்சியை உருவாக்கும் விதமாகவும் 21 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். போப் ஆண்டவர் போருக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருமுறை ரோம் நகரில் 40 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்.
ஆர்க் சமுதாயத்தின் கிளைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. பெல்ஜியத்தில் அக்குழுவுடன் இணைந்த லியோ பிரவோ மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த தொண்டர் என்னும் பெயரைப் பெற்றார். அவருடைய தொண்டுணர்வைப் புரிந்துகொண்ட சாந்திதாஸ், அவரை இந்தியாவுக்குச் சென்று தொண்டாற்றும்படி கேட்டுக்கொண்டார். அவர் உடனே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். வார்தாவில் சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு கல்லுப்பட்டியில் உள்ள காந்திநிகேதனுக்கு வந்தார். ஓராண்டுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து காந்திய வழிகள் பற்றியும் ஆசிரம வாழ்க்கையைப்பற்றியும் கிராமப்பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டார். எல்லோரும் இன்புற்று ஒற்றுமையாக வாழ்கிற சர்வோதய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்னும் விருப்பம் அவருக்குள் எழுந்தது.
பூமிதான இயக்கத்துக்காக கடவூர் ஜமீன்தார் தன்னிடம் இருந்த 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருந்த நேரம் அது. அந்த இடத்தின் பெயர் சேவாப்பூர். அங்கு தங்கி ஏழை மக்களுக்கு உதவும்படி பிரபோவிடம் கேட்டுக்கொண்டார் கெய்த்தான். கல்லுப்பட்டி காந்தி நிகேதனிலிருந்து சேவாப்பூருக்கு வந்து சேர்ந்தார் பிரவோ. இன்ப சேவா சங்கம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக சேவாப்பூரில் ஒரு சமத்துவபுரத்தைக் கட்டியெழுப்பினார் பிரவோ. சேவாப்பூரைப்போலவே அவர் அமைத்த மற்றொரு புதிய கிராமம் வினோபாஜிபுரம். இதற்கு வேண்டிய நிதியின் ஒரு பகுதியை அரசு வழங்கினாலும் பெல்ஜியத்தில் வசிக்கும் நண்பர்கள் வழியாகவும் தன் சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தின் வழியாகவும் பெரும்பகுதியான தொகையைத் திரட்டினார். ஏறத்தாழ முப்பதாண்டுக்காலம் ஏழை மக்களின் உயர்வுக்காக அந்தப் பகுதியிலேயே சேவையாற்றி மறைந்தார் பிரவோ.
காந்தியமே மக்கள் சேவைக்கான அடிப்படை விசை. க.அருணாசலம், கோ.வே., ரா.குருசாமி, ஜீவா போன்றோரைப்பற்றி எழுதியிருக்கும் நினைவலைகளிலும் இந்தப் புள்ளியை வெவ்வேறு கோணங்களில் தொட்டுக் காட்டுகிறார் மா.பா.குருசாமி. அவர் நினைவலைகள் வழியாக திரண்டெழும் ஜீவாவைப்பற்றிய சித்திரம் உயிர்த்தன்மையோடு காணப்படுகிறது.
ஜீவாவைச் சந்திக்கச் செல்லும்போது அவர் கல்லூரி மாணவர். சந்திரபோஸ் மணி என்பவர் அவருடைய கல்லூரி நண்பர். அவருடைய சித்தப்பா பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி. ஒருநாள் தன் சித்தப்பாவைச் சந்திக்க மணி செல்கிறார். அப்போது அவருக்குத் துணையாக குருசாமியும் செல்கிறார். இருவரும் கட்சி அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உள்ளே கட்சியின் உட்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் வெளியே அமரவைக்கப்படுகிறார்கள். தற்செயலாக அந்த அலுவலக வளாகத்திலேயே ஜனசக்தி இதழின் அலுவலகமும் இருப்பதைப் பார்க்கிறார் குருசாமி. அதைப் பார்த்ததுமே அந்த இதழின் ஆசிரியர் ஜீவாவின் நினைவு அவருக்கு வருகிறது. உடனே ஜீவாவை இருவரும் பார்க்கச் செல்கிறார்கள். அறைக்கு வெளியே இருந்த தோழரிடம் தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். அவர் உள்ளே சென்று பார்க்கும்படி சொல்கிறார். உள்ளே யாருமில்லை. அந்தப் பக்கமாக வந்த ஒருவர் அவர் அச்சுக்கோர்க்கும் பகுதியில் இருப்பதாகவும் விரைவில் வருவார் என்றும் தெரிவித்துவிட்டுச் செல்கிறார். சிறிது நேரத்தில் அவரே வந்துவிடுகிறார். அற்புதமான ஓர் ஆளுமையான ஜீவாவின் அறிமுகம் அப்படித்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது.
ஒருமுறை கல்லூரி திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச ஜீவாவை அழைக்கிறார் குருசாமி. மகாகவி கண்ட கனவு என்னும் தலைப்பில் கையில் எந்தக் குறிப்புமின்றி அழகாக சொற்பொழிவாற்றுகிறார் ஜீவா. மற்றொரு முறை கம்பரைப்பற்றிப் பேச அழைக்கிறார். அப்போது அண்ணாவின் ‘கம்பரசம்’ வெளியாகி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேச்சுகள் எழுந்த நேரம். அரசியல் கலக்காமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறார் துறைத்தலைவர். கம்பன் பாடல்களின் பொதிந்திருக்கும் கவிநயத்தையும் கற்பனை வளத்தையும் சுட்டிக்காட்டி தன் உரையை முடித்துக்கொள்கிறார் ஜீவா.
மா.பா.குருசாமியின் காலத்தில் நல்ல எழுத்தாளராகவும் இலக்கியப் பேச்சாளராகவும் விளங்கியவர் ம.ரா.போ.குருசாமி. அவர் மு.வ.வின் நேரடி மாணவர். கோவையில் பணிபுரிந்து வந்தார். இருவருமே தமிழ்நாடு என்னும் இதழில் எழுதி வந்தனர். ஒருமுறை திருநெல்வேலி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ம.ரா.போ.குருசாமியை தம் கல்லூரிக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களிடம் தொடர்பு முகவரி இல்லை. அதனால் அவர்கள் தமிழ்நாடு இதழுக்கு எழுதிக் கேட்டார்கள். அவர்களும் அனுப்பிவைத்தார்கள். ஆனால் அது மா.பா.குருசாமியின் முகவரி. அது தெரியாமல் அவரை கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, அவருடைய வயதைப் பார்த்த பிறகே அவர்களுக்கு உண்மை புரிகிறது. உடனே அவருடைய தலைமையில் பேசமாட்டோம் என ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கவிருக்கும் நேரத்தில் இது என்ன புதுக்குழப்பம் என்று நினைக்கிறார் மா.பா.குருசாமி. தக்க சமயத்தில் இடையில் புகுந்த துறைத்தலைவர் இவர்தான் தலைமை தாங்குவார், போய் அமருங்கள் என்று ஆணித்தரமாக தெரிவித்துவிடுகிறார். அன்றைய தலைமை உரையை மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார் மா.பா.குருசாமி. அன்று அவரை சங்கடத்திலிருந்து மீட்ட துறைத்தலைவர் பேராசிரியர் நா.வானமாமலை. இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்குகிறது அவரைப்பற்றிய கட்டுரை.
இன்று வீட்டிலிருந்து தெருவில் இறங்கினால் ஒவ்வொரு நாளும் நடைபாதையில், பேருந்துகளில், புகைவண்டிகளில், சந்தைகளில், அரங்குகளில், பொழுதுபோக்கும் இடங்களில் என எண்ணற்ற இடங்களில் ஏராளமானவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களில் எத்தனை பேரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கிறோம், எத்தனை பேரிடம் உரையாடுகிறோம், எத்தனை பேரிடம் நட்புடன் இருக்கிறோம் என கணக்கிட்டுப் பார்த்தால் நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழலில் நட்பைத் தேடிச் செல்வதும் தொடர்வதும் ஒவ்வொரு நட்பும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதும் அபூர்வமான செய்திகள். அபூர்வமான மனிதர்களுக்கே அத்தகு அபூர்வமான வாய்ப்புகள் அமைகின்றன. மா.பா.குருசாமி அபூர்வமான மனிதர்களில் ஒருவர். தான் சந்தித்த மாமனிதர்களை தம் சொற்சித்திரங்கள் வழியாக நம்மையும் சந்திக்கவைக்கிறார்.
(நான் கண்ட மாமனிதர்கள். மா.பா.குருசாமி. சர்வோதய இலக்கியப்பண்ணை, மதுரை. விலை.ரூ70)