காவல் நிலைய வாசல் பகுதி வழக்கமான பரப்பரப்பின்றி யாருமற்று வெறிச்சோடியிருந்தது , முன்பே இங்கு பலமுறை வந்து போயிருந்தும் இப்படி மரங்கள் ஒன்று கூட இல்லாத மொட்டை வெளியாக வாசல் பகுதி இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். காவல் நிலையம் சற்று பழங்கால கட்டிடம், ஆனால் வண்ணம் அடித்து நன்றாக பேணியிருந்தார்கள். வெளியே நிற்பதாக சொன்னவர்களை காணாது தேடினேன், அவர்கள் சற்று தள்ளி வாகன நிறுத்திற்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட் கூரையில் கீழ் நின்று கொண்டிருந்தனர், நான் பார்ப்பதை கண்ட அதிலொருவர் கைகாட்டி என்னை அழைத்தார், செல்லும் போதே என் பரபரப்பை வெளிக்காட்டாது அனிச்சையாக பார்ப்பதை போல அந்த பெண்ணை துளாவினேன்,அவள் இடது கடைசி ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள், அருகில் இருந்த குண்டு பெண்மணியை ஒட்டியவாறு. அவள் முகம் நான் தேடிய பெண் அவள்தான் என்று சொல்லியது. நான் அருகில் சென்றதும் சேகர் முன்வந்து ‘ஏன்டா லேட்டு‘ என்று கேட்டபடி அந்த பெண்ணை காட்டி ‘இவங்கதான்‘ என்றான், அருகில் பார்த்த போது என் முதல் கவனம் அவள் கழுத்தில் தான் போனது, ரத்த திட்டுகள் போல இருந்தன, அவளை பார்த்து ‘ கழுத்துல என்ன? ‘ என்றேன், அவள் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள், அருகில் இருந்த குண்டு பெண்மணி ‘ சண்டாளன் கழுத்துலயே மிதிச்சுருக்கான் ‘ என்றாள்.
வெயிலும் சேர்ந்து கொள்ள அவன் மீது கோபம் கோபமாக வந்தது, தேவிடியா மகன் என்று முணுமுணுத்து கொண்டேன், அது அவளின் காதில் விழுந்திருக்கும் போல, சட்டெனெ முகம் தூக்கி என்னை பார்த்தாள் , அவள் பார்வையை தவிர்க்கும் விதமாக திரும்பி கொண்டேன். சேகரை நோக்கி ‘ அவன் வரானா? ‘என்றேன், சேகர் ” இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு இப்ப மிரட்டனாரு, இப்ப வந்தரனு இருக்கான் ” என்றான். பிறகு அவனிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி அந்த குண்டு பெண்மணியை நோக்கி ” உங்க பொண்ணா ” என்றேன், அவள் ” இல்ல தம்பி அண்ணன் பொண்ணு, இவளுக்கு அம்மா இல்ல “என்றாள், பின் “எங்க அண்ணனும் இறந்துட்டாங்க, அவங்க இறந்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆவல ” என்றாள், “கூட பிறந்தவங்க ” என்றேன், “யாரும் இல்லங்க தம்பி !” என்று முடித்து கொண்டாள். இவள் அணிந்திருக்கும் நகைகள் 20 சவரன் இருக்கும், ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாததை மலிவான பாலியெஸ்டர் சேலை , குளிக்காத சிக்கு கொண்ட தலை என இருந்தாள், இவளுக்கு நேர் மாறாக வெறும் தாலி சரடுடன் அந்த காயம் பட்ட பெண் இருந்தாள், சில இடங்களில் தேமல்கள் இருந்ததே தவிர அவை அசூயை அளிக்க கூடியதாக இருக்க வில்லை, அவளை நோக்கி ” கொஞ்சம் முன்னாடி வாங்க ” என்றேன், அதை கேட்டு திகைத்தவளாக திரும்பி மற்றவர்களை பார்த்தேன், பின் தயங்கி என் பக்கம் வந்தாள்.
“வீட்டுக்காரர் குடிப்பாரா” என்றேன், “காலைலயே குடிச்சுருவாருங்க ” என்றாள், அது இல்லாம அவரால இருக்க முடியாதுங்க” என்றாள். “குழந்தைக “என்றேன், இன்னும் இல்லைங்க என்றாள், அதை தயங்கி சொன்னாள், ” அதுக்கு காரணம் நீங்களா இருக்க மாட்டீங்க ” என்றேன், பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தாள்.
“ஒன்னும் பிரச்னை இல்லை, அவன் வேணும்னா வேணாமா னு முடிவு பண்ணுங்க “, வேணாம்னு இருந்தா பிறகு உங்க பக்கமே வராத மாதிரி ஸ்டேஷன்ல சொல்லி ரெடி பண்ணிடலாம் ” என்றேன். அவள் பதில் ஏதும் சொல்ல வில்லை, ” இப்படி தினமும் அடிப்பாரா “என்றேன், “ஆமாங்க” என்றாள், பின் சில கணம் கடந்து ” அழுதா எச்சா அடிப்பாருங்க ” என்றாள், சொல்ல சொல்ல அவளை பார்த்து கொண்டிருந்தேன், எழும்பு மேல் வெளிர்மஞ்சள் தோல் போர்த்தியவள் போல இருந்தாள், இருப்பினும் பொதுவாக ஒல்லி பெண்களை போல் அல்லாது அளவான மார்பும் ஒடுங்காத கன்னங்களும் கொண்டிருந்தாள், நீள்வட்ட முகம், நடுநேராக தலை சீவியிருந்தாள், முகத்தில் விபூதி இருந்தது, வரும் வழியில் ஏதும் சாலையை ஆக்கிரமித்த அல்லது சாலை ஆக்கிரமித்த கோவிலுக்கு சென்று வேண்டி கொண்டிருப்பாள், அவளுக்கு சோகம் அழகை கொடுக்கிறது என்று தோன்றியது. மனம் விட்டு வெளியே வந்து” என்ன முடிவு பண்ணியிருக்க “என்றேன், அவள் தயங்கி தயங்கி ” என்னால தினமும் பயந்து அவரோட வாழ முடியாதுங்க ” என்றாள்.
என் மனம் ஆசுவாசம் கொண்டது, தப்பித்து கொள்வாள் என்று எண்ணி கொண்டேன், பிறகு ” வேலைக்கு போறீயாமா” என்றேன்,” இல்லைங்க ” என்றாள், சொல்லும் போது அவள் குரலில் கொஞ்சம் உற்சாகம் வெளிப்பட்டதை உணர்ந்தேன், ” பாத்து கொடுத்தா போவியா ” என்றேன், அவள்” ம், போறேங்க ” என்றாள், அவள் தனக்கு தானே சொல்லி கொள்கிறாள் என்று தோன்றியது. ” சரி இங்கயே வைட் பண்ணுங்க “என்று சொல்லி சேகரை அழைத்து ஸ்டேஷன் உள்ளே சென்றேன், பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவர்கள்தான், கட்சியில் இருப்பதால் கிடைத்த பலன்களில் ஒன்று இது, “பாத்துக்கலாம் தம்பி ” என்ற எனக்கு சாதகமான வார்த்தையை பெற்று வெளியே வந்தேன், கூட வந்த சேகர் ” நா செலவாகும் னு நினைச்சேன், பரவால்ல ” என்றான்.
பெண் பக்கம் வந்து “சரி வாங்க, அவன் மெல்ல வரட்டும் நாம வெளிய டீ சாப்பிட்டு வரலாம் “என்றேன், குண்டு பெண்மணி முதல் ஆளாக முன்னே வந்தாள், அந்த பெண்ணையும் “வாமா போயிட்டு வந்தடலாம் எவ்வளவு நேரம் இங்கயே நிக்க ” என்று சொல்லி அவளையும் இணைத்து கொண்டாள் .
மொத்தம் சேர்த்து 9 டீ 1 பிளாக் டீ சொன்னேன், எனக்கு பிளாக் டீ, பால் அருந்துவது பாவம், டீ குடிப்பதும் பாவம்தான், இப்போதைக்கு ஒரு பாவத்திலிருந்து மட்டும் என்னை தற்காத்து கொண்டு வருகிறேன். எதேச்சையாக நிகழ்வதை போல அவள் அருகில் வந்தேன், அதே எதேச்சையை அந்தகுண்டு பெண்மணியும் செய்தாள், “கொஞ்சம் இவங்க கிட்ட பேசணும்” என்று கடும் தொனியில் குண்டு பெண்ணிடம் சொன்னேன், நீங்க பேசுங்க என்று சொல்லி வேகமாக தள்ளி நின்று கொண்டாள்.
” வீட்டு காரரை உங்களுக்கு பிடிக்குமா என்றேன், ஒன்றும் சொல்லாமல் இருந்தாள், நான் மீண்டும் ” அவராவது மற்ற நேரங்களில் உங்க மேல பிரியமா இருப்பாரா ” என்றேன், ” இல்லைங்க ” என்றாள். ” ஏனா எதையும் யோசிக்குங்க, அப்பறம் திரும்ப திரும்ப முடிவை மாத்திட்டுருக்க இதுல முடியாது” என்றேன்.” வயசு எவ்வளோ “என்றேன், “32 “என்றாள், ” தாராளமா இன்னொரு கல்யாணம் பண்ணலாம், நிறைய இப்ப அப்படி நடக்குது ” என்றேன், அப்போது குண்டு பெண்மணி ” பையனை திருத்த முடியாதுங்களா , கொஞ்சம் போலீசு மிரட்டினா பையன் பயந்து சரியா நடந்துக்குவான் ல “என்றாள், அதுவரை அவள் நாங்கள் பேசியதை கவனித்து நின்று கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன், அவள் மேல் எரிச்சல் வந்தது ” பையன் உங்க சொந்தமா ” என்றேன், அதை கேட்டு திணறியவள் ” சொந்தமெல்லாம் இல்லைங்க, பொதுவா பசங்க குணம் இப்படித்தான் இருக்கும், புள்ளைகதான் கொஞ்சம் பேசி பேசி சரிபண்ண..” இப்படி பேசி கொண்டிருந்தவளை மறித்து “உங்களுக்கு வீட்டுக்காரர் இப்படியா ” என்றேன், அவள் பதறி ” இல்லைங்க ” என்று சொல்வதற்குள் இன்னொரு குரல் அவளை நோக்கி “சனியனே, கொஞ்சம் மூடிட்டு இருடி ” என்று சொன்னது, அது அந்த குண்டு பெண்ணின் கணவர் போல, அவர் என்னை நோக்கி ” இந்த சனியன் இப்படித்தான், நீங்க இவளை பொருட்படுத்தாதீங்க, அந்த பொண்ணு தினம் தினம் நரகத்துல நிக்குது, அவன் ஒழிஞ்சாதான் இந்த பொண்ணுக்கு விமோசனம், ” என்று பொரிந்தார், நான் ” இனி ஒன்னும் பிரச்னை இல்லைங்க, ஸ்டேஷன் ல எல்லாம் பேசியாச்சு, ஒன்னும் கவலை பட வேண்டாம்” என்றேன் .
டீ குடித்து முடித்த பிறகு ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம், சேகர் சட்டென என் அருகில் வந்து “அவன் அங்க வந்து நின்னுட்டு இருக்கான்” என்றான், நான் ஸ்டேஷன் நோக்கி பார்க்க, அங்கு பழைய புல்லட் அருகில் வெள்ளை சட்டையும், வேட்டியும் அணிந்து ஒருவன் நின்றுகொண்டிருந்தான், நாங்கள் அவனை கண்டு கொள்ளாது ஸ்டேஷன் நோக்கி நடந்தோம், அவன் வேகமாக வந்து எங்களை மறித்த படி நின்று “நில்லுடி” என்று அந்த பெண்ணை நோக்கி சொன்னான் , அவள் பதில் சொல்லும் முன்பாக நான் இடையில் புகுந்து ” எதுனாலும் ஸ்டேஷன் ல வச்சு பேசிக்கலாம் ” என்றான், அவன் என்னை பார்த்து கோபமாக முறைத்து பின் அவளை பார்த்து” நில்லுடி, வாடி எங்கூட ” என்றாள், அப்போது அந்த பெண் சட்டெனெ நின்று விட்டாள், எனக்கு அதிர்ச்சி, அவள் நின்றதை உணர்ந்து மற்றவர்களும் நின்று விட்டனர்,
அவன் கோபத்துடன் ” இது எனக்கும் எ பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்னை, நீங்கல்லாம் உங்க வேலையை போய் பாருங்க ” என்றான், பிறகு அவளிடம் ” வாடி ” என்று கத்தினான், நான் ஒருவாறு பொறுமையை வரவைத்து கொண்டு அந்த பெண்ணிடம் ” உங்களுக்கு விருப்பம்னா இவர் கூட போங்க, இல்லைனா வாங்க ஸ்டேஷன் ல வச்சு பேசிக்கலாம், நீங்க இவருக்கு பயப்பட வேண்டியதில்ல “என்றேன், அவன் கோபத்துடன் என்னை நோக்கி ” யாருடா நீ ” என்று கத்தினான், “மரியாதையா பேசுங்க, ஸ்டேஷன் ல பிரச்னை போயிடுச்சு, ஸ்டேஷன் வா பேசிக்கலாம் ” என்றேன், அது அவனுக்கு இன்னும் கோபத்தை அளித்தது, ஆனால் அவன் பதிலுக்கு என்னிடம் பேசாமல் அவளை நோக்கி திரும்பி வெறியுடன் ” தேவிடியா முண்ட ” என்று சொல்லியபடி அடிக்க போனான், என் கூட இருந்தவர்கள் அதை பார்த்த உடனே சட்டென்று ஒன்று சேர்ந்து அவனை பிடித்து தள்ளி விட்டார்கள், தள்ளியதில் பின் நேராக பொத்தென விழுந்தான், விழுந்தவன் அதே வேகத்தில் எழுந்து ஆங்காரமாக திரும்ப அதே வார்த்தையில் அவளை நோக்கி கத்தினான், சத்தம் கேட்டு ஸ்டேஷன் உள்ளே இருந்து ஒரு போலீஸ்காரர் ” எவன்டா கத்துனது ” என்று சத்தமாக மிரட்டிய படி வெளியே வந்தார், அவரது மீசையும் போத்து உடலும் எனக்கே பயத்தை அளித்தது, ஆனால் அது அவன் கவனத்திற்குள் போகவே இல்லை போல, ” வாடி ” என்று கத்தி கொண்டிருந்தான், போலீஸ்காரர் அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார், அவன் மீண்டும் ” தேவிடியா ” என்று சொல்ல தொடங்கும் கணத்தில் சரியாக போலீஸ் காரர் அவனை ஓங்கி ஒரு அறை விட்டார், அது அவனை தடுமாற வைத்து மீண்டும் கீழே விழ வைத்து விட்டது, அவன் தடுமாறி எழும் போது ” கத்தன, மிதிச்சு கொன்னுடுவேன் நாயே ! ” என்று போலீஸ்காரர் மிரட்டினார், அவன் மீண்டும் அதை பொருட்படுத்தாது அவளை நோக்கி ” முண்ட வாடி ” என்று அங்காரமாக கத்தி கொண்டே எழ போலீஸ்காரர் ஓங்கி அவன் நெஞ்சில் மிதித்தார், கீழே மண் அதிர விழுந்தான், இவனுக்கு வேணும் இது என்று எண்ணி கொண்டே அவனை பார்த்து கொண்டிருந்த நான் சட்டென்று ஏதோ தோன்ற திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், அவள் அழுது கொண்டிருந்தாள். உடனே நான் போலீஸ்கார் அருகில் சென்று ” வேணாம் விடுங்க சார் “என்றேன், ” இவனுக எல்லாம் சைக்கோ தாயோளிக, கைகால உடைச்சு மூலைல உட்கார வச்சாத்தான் திருந்துவானுக ” என்றார் , விழுந்ததில் அவன் வேட்டி நழுவியிருந்தது, சட்டை எல்லாம் மண் படிந்திருந்தது, முகம் பார்க்க எந்நேரமும் அழ தொடங்கி விடுவான் போல இருந்தது. பெண் என்னருகில் வந்தாள் ” அண்ணா நான் இவரோடவே போயிடுறேன்ணா ” என்றாள், எங்களோடு இருந்த ஒருவர் ” இவனோட போனா சாவடிச்சுவான் உன்ன ” என்று கத்தினார், நான் அவரிடம் ” கொஞ்சம் பொறுமையா இருங்க “என்றேன்.
குண்டு பெண்மணி என் அருகில் வந்து ” அவனை பொண்ண அடிக்க கூடாது னு சொல்லி மிரட்டி மட்டும் விட சொல்லுங்க தம்பி, பையன் அடங்கிடுவான் ” என்று சொல்லி பெண்ணை நோக்கி “நீயும் அவனை கோபம் வர மாதிரி நடந்துக்காதே ” என்றாள், இதற்கு மீறி இங்கு நிற்க வேண்டியதில்லை என்று எண்ணம் வந்த உடனே அந்த கூட்டத்திலிருந்து விலகி வேகமாக நகர்ந்து என் இரு சக்கர வாகனம் இருக்கும் இடம் நோக்கி சென்றேன், பின்னிலிருந்து சேகர்” நில்லுடா ” என்று கத்தியது கேட்டது.
நடக்கும் போது ‘அவன் துளியும் மாற மாட்டான்‘ என்று மனம் எண்ண துவங்கியதுமே திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், அவள் அந்த குண்டு பெண்மணியை அருகில் ஒட்டியவாறு நின்று கொண்டிருந்தாள்.