பார்க்கப்பார்க்க அலுக்காத ஒன்று கடல். வேளாங்கண்ணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு வெளியே வந்து சோழிகளை கொண்டமாலைகள் வழியே கடலை கண்டது எட்டாவது வயதில். அதன்பின் ஓரிருமுறை மெரினாவில் கால் நனைத்ததுண்டு. நாகப்பட்டினத்தில் பாலிடெக்னிக் விடுதியிலிருந்து ஒரு மைல் நடந்து போனால் கடற்கரை. அக்கம்பக்கம் ஆளில்லாத கரை. கடலில் நீச்சல் அடிப்பது ஒரு விளையாட்டு போல.. அலையடிக்கும் போது குனிந்து பாய்வது போல கரையைநோக்கி நின்று கொண்டால் அதுவே இழுத்துக்கொண்டு வந்து கரையில் போட்டுவிடும். அந்தளவிற்கு மட்டும் ஞாபகம் இருக்கிறது.
முத்துராமன் என்றொரு நண்பன் என்னோடு விடுதியில் தங்கியிருந்தான். கடல் நீச்சல் அவன் சொல்லித்தந்தது. அவனைத்தவிர மீனவர் என யாரையும் சந்தித்ததும் இல்லை.
கடலை அறிந்த அளவு கூட கடல்வாழ் மக்கள் குறித்து அறிந்ததில்லை. மீன்கள் சுத்தம். அசைவம் உண்பதில்லை என்பதால் என சொல்ல மாட்டேன். எனக்கு விவசாயம் பற்றியும் தெரியாது. சாம்பாரில் உள்ள செள செள விற்கும் பூசணிக்காயக்கும்,பொரியலில் போட்ட சேனைக்கும் கருணைக்கும் வித்தியாசம் அறிந்ததில்லை.
சுனாமி வந்த நேரம் டிவியில் மீனவர்களை பற்றி அதிகம் பார்த்தேன். பெற்றோரையும் உற்றாரையும் பறிகொடுத்த மீனவ குழந்தைகள் மன்னார்குடியில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருக்க, அந்த ஐந்து வயது குழந்தைகள் ஏதும் அறியமல் பாண்டி ஆடிக்கொண்டிருந்த்தை கண்டு அதிர்ந்து நின்றிருக்கிறேன். ஸ்டேட் சென்டிரலுக்கு எழுதும் அத்துமீறல் மற்றும் துப்பாக்கி சூடு குறித்த கடிதங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தான அரசின் கவலையை எண்ணி ஆனந்த கண்ணீரை அடிக்கடி மல்கியிருக்கிறேன். படகோட்டி, கடலோர கவிதைகள் என இரு கடல் சார்ந்த படைப்புகளை கண்டிருக்கிறேன்.
என் வீட்டிலிருந்து அலுவலகம் சென்று திரும்பி வருவதில் எனக்கு பெரிதாக பயம் இல்லை. ஒருமுறை அலுவலகம் அதிர்ந்திருக்கிறது. எர்த் குவேக் என ஓடிவந்து பாதுகாப்பாக நின்று, எமர்ஜென்ஸி ரெஸ்க்யூ டீம் அது பக்கத்து ப்ளாட்வாலா சுவற்றில் போட்ட ட்ரில்லிங்தானே தவிர வேறில்லை என அமைதிப்படுத்திய போது ஆசுவாசபட்டுக்கொண்டே ஆரஞ்சு ஜூஸ் குடித்து அதை பற்றி அடுத்த நான்கு நாட்கள் என் கருத்தையும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு ஆட்டத்துக்கே இப்படி வந்து விட்டோமே ஆனால் ஆடிக்கொண்டே இருக்கும் கடலில் வேலைக்கு போனால் திரும்ப வருவோமா என்ற நிச்சயமில்லாத வேலைக்கு ஏன் மக்கள் போகிறார்கள் என யோசித்ததில்லை.
கடல் திரைப்படமும், க்றிஸ் எழுதிய கடலாழம் என்னும் சிறுகதையுமே நான் கடலை அறிந்த முதற்படைப்புகள். கடலாழம் என்கிற சிறுகதைஇரு வருடங்கள் ஜெ. தளத்தில் வந்தது. தன் அண்ணனை பாம்பேக்கு அனுப்பிவைத்து, அவனுக்கு வரும் வரதட்சனையை கொண்டு தங்கைக்கு மணம்முடித்து, அதன்பின் அதன் தொடர்ச்சியாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழையும் மத்தியாஸ், தன்மையில் சொல்லும் சிறுகதை. அந்த சமயத்தில் பரதவர்களில் இன்னொரு தேர்ந்த கதைசொல்லி ஒருவர் வந்துவிட்டார் என மகிழ்ச்சியோடு வந்த பல கடிதங்களும் நினைவிருக்கின்றன.
அது சிறுகதையாகவே துறைவனிலும் வருகிறது அதற்கு பிறகு மத்தியாஸின் குடும்பம் என்ன ஆனது என்பதும் வருகிறது. அதனால் இது அவர் குறித்த குடும்ப நாவலா என்றால் இல்லை. பர்த்லோமி என்றொரு மீனவர் முதல் அத்தியாயத்திலும் கடைசி வரையும் வருகிறார். அவர் தன் குல / இன வரலாறை அறிந்திருக்கிறார். தன் மகனை படிக்க வைக்கிறார். இது அவரது வாழ்க்கை சரித்திரமா என்றால் அதுவும் இல்லை.
துறைவன் முழுக்க முழுக்க கடலும், கடல் சார்ந்த மனிதர்களும் கொண்ட ஒரு நெய்தல் நிலத்தின் வாழ்க்கை பதிவு என சொல்லலாம். பரதவன், துறைவன்என பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் சமுதாயத்தை சார்ந்த முக்குவர் என்றொரு பிரிவினரோடு இரு தலைமுறை காலம் பயணப்படும் நாவல் இது. நாவலை சுவாரசியமாக்குவது அதில் க்றிஸ் தரும் தகவல்கள். கலிங்க யுத்தம்,புனித சவேரியார் வருகை, கத்தோலிக்கம் மற்றும் லண்டன் மிஷனுக்கான உரசல்கள், குறிப்பாக வள்ளத்தை குறித்தான வர்ணனைகள் மற்றும் ஜிபிஎஸ், வயர்லெஸ் போன்ற உபகரணங்களை பரதவர் கையாளும் முறைகள், திசைகள் குறித்தான குழப்பம் , விளக்கம் என தகவல்களை வரவேற்பறை பன்னீர் போல் தெளிக்காமல் நன்றாக சுண்ணாம்பு தடவி, சீவல் வைத்து தாம்பூலமாகவே தருகிறார். இது இரு சிறுகதைகளுக்குப்பிறகான இவரின் முதல் நாவல் என்பது நம்புவதற்கு சிரமமாக உள்ளது.
கதை நிகழும் வருடங்களை குறிப்பிட்டு சொல்லாமல், மீனவ நண்பன் அடுத்த வரம் ரிலீஸ், அன்னை ஓர் ஆலயம் போன மாதம் பார்த்தேன் போன்ற வரிகளின் வழியாகவே குறிப்புணர்த்தி இருப்பது நல்லதொரு யுக்தி
பர்த்லொமி பல இடங்களில் வரலாற்று தகவல்கள் மூலம் கதையை நகர்த்தி செல்கிறார் என்றாலும் லார்சன் கணவாய் பிடிக்கும் நுட்பமும், கட்டகொம்பனை பிடிக்கும் போராட்டமும் சுவாரசியாமாக எடுத்து செல்கின்றன. சின்ன நண்டை வைத்து பெரிய நண்டு, அதை வைத்து கணவாய் என மீன்பிடி நுட்பங்களை இடையிடையே சொல்லி சுவாரசியமக்கியிருக்கிறார் க்றிஸ்.
ஓங்கில் குடும்பத்தை பிரித்தற்காக வருந்தும் ராயப்பன், படிக்கவிடாத வாத்தியாரை ஓடவைக்கும் ஸ்டீபன், பின் ஆரோன், சிறியபுஷ்பம், தனக்கு கல்லறை கட்டி வைத்திருக்கும் ஊர்த்தலைவர் தாசையா என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்.
படகு வாடகை, டீசல் போக மாதம் பத்தாயிரம்தான் கையில் நிற்கும் என அடிம சொல்லும் இடமும் ஏழு வருடங்கள்வரை ஒருவரை தேடப்படுபவராகவே வைத்திருந்து நிவரணத்தை தாமதபடுத்தும் சட்ட திட்டங்கள் என மனதை பிணையும் சித்திரங்களும் உண்டு.
நாவலின் மொழி நாகர்கோயில் வட்டார வழக்கு. கன்யாகுமரி மாவட்ட மக்களுக்கும்,ஜெ., நாஞ்சில் வாசகர்களுக்கும் கஷ்டம் தெரியாது. ஆழி சூழ் உலகு படித்தவர்களும் இதை சரளமாக படிக்கலாம். மற்றவர்கள் இதன் மொழிநடையிலும், வள்ளம் கரைமடி போன்ற பிரத்யேக வார்த்தை பிரயோகங்களிலும் சற்று தடுமாறக்கூடும். பாஸ்டர் எம்லின் அந்த ஊர்க்காரர் இல்லை. ஆகவே, மிக அழகாக நாலுவரி ‘நல்ல’ தமிழ் பேசுகிறார்.
சுவாரசியமான நாவலில் குறைகளையும் சொல்ல வேண்டிய மரபை காக்க வேண்டிய கடமை இருப்பதால், இரு விஷயங்களை குறிப்பிடலாம். முதலாவது, மிகவும் நேரான பாதையில் சொல்ல வந்த கருத்தை மட்டும்சொல்லும் விதமாக இருப்பதால் நாவல் சில தளங்களில் விஸ்தரிக்காமல் விட்டுவிட்டார். முக்குவர் என்றால் நல்லா முக்குவாங்க என்ற பெயர் குறித்த அத்தியாத்தைதவிர கறாரான நடையில் நாவல் செல்கிறது. இரண்டாவது, வட்டார வழக்கு வார்த்தைகளுக்கு ஒரு அகராதியை இணைத்திருக்கலாம் என தோன்றியது. ஆழி சூழ் உலகில் இணைத்திருக்கும் அகராதியில் சில வார்த்தைகளை பார்த்து தெளிய வேண்டியிருந்தது.
இந்த நாவலின் முக்கியத்துவத்தை பற்றி ஜெயமோகன் முன்னுரை விரிவாகவே பேசுகிறது.
Filed under: எழுத்து Tagged: துறைவன், விமர்சனம், காளி பிரசாத்
