தரையைத் தொட்டுச் செல்லும் ஓசைகளுடன் விமானங்கள் தாழப் பறந்து செல்வதை இங்கே வரும்போதே கண்டாள் உமையாள். மனிதர்கள், அவர்களது அவசரங்கள், அவஸ்தைகள், ஏமாற்றங்கள். தான் மிகவும் பின்தங்கிவிட்டதாக நினைத்தாள். இல்லை இந்த வெற்று வேகங்களுக்கான அவசியங்கள் அவள் வாழ்வில் ஏற்படவேயில்லையே. பின் அவள் எப்படி தோற்றவளாவாள்? தோற்றவளில்லை, ஆனால் பறிகொடுத்தவளோ? அதில் அவளது பிழைதான் என்ன?
பதினேழு வயதில் அவள் பி.ஏ முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கையில் படிப்பை நிறுத்தி அவளுக்குத் திருமணம். இளமையை உணரும் பொழுதுகளுக்கு முன்னாலே கர்ப்பம். முத்துமீனாள் பிறந்த இரு வருடங்களுக்குள்ளாகவே அவள் மங்கலப் பெண்ணிலிருந்து விதவை எனப்பட்டாள். கனன்று கொண்டிருந்த தீ மேலே சாம்பல் பூத்தது. ”உனக்கென்று ஏதும் ஆசைகள் இருக்கிறதா, மேலே படிக்கிறாயா, கைத் தொழில் ஏதாவது கற்றுக் கொள்கிறாயா?” எனக் கேட்டவர் இல்லை. மாமியாரும் இல்லாத பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாக, இப்பொழுது கணவனையும் இழந்தவளாக அவள் நிலை புகுந்த வீட்டாருக்கு வசதியாகத்தான் போனது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டும், அவள் உழைத்தாலும் எல்லோரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முத்துமீனாளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்தே ஆறு வருடங்களாகிவிட்டன. அவளின் நாத்தியின் மகன்தான் மருமகன்.
உமையாள் இன்று ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்று புரியாமல் யோசித்தாள். இந்த இடத்தை ஒரு மருத்துவமனை என்று சொல்ல முடியுமா? முத்துமீனாளும்,குமரப்பனும் நான்கு வருடங்களாகவே சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள். தன்னை இங்கே அழைத்து வந்திருப்பது அவளுக்குக் குடும்ப வேலைகளிலிருந்து சற்று ஓய்வு எனக்கூடச் சொல்லலாம்.
எத்தனை அழகான இடங்கள், வகைவகையான மனிதர்கள், அவர்களின் விரைவோட்டங்கள், எறும்புச்சாரியென வரிசையில் கார்கள், அமைதி ததும்பும் ஆலயங்கள், சிரித்துக் களியாடும் பூங்காக்கள், உலகின் அத்தனை விதமான உணவுகளும் கிடைக்கும் விடுதிகள், உழைப்பிற்கும், நேரத்திற்கும், சுத்தத்திற்கும், பணத்திற்கும் முதன்மை கொண்டாடும் மக்கள். இது வேறு ஒரு உலகம்.
ஆனால், எதற்காக மருத்துவமனை வந்திருக்கிறோம் என அவளுக்குப் புரியவில்லை. மீனாளும்,குமரனும் அவளை அங்கே அமர்த்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். அவள் அமர்ந்திருந்த வரவேற்பறையில் இனிதான லாவண்டர் மணம் கமழ்ந்தது. உறுத்தாத இசை மெலிதாகக் கசிந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனிலிருந்த நான்கு யுவதிகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தனர். மீனாள் போடுகிற லிப்கலர் நன்றாக இல்லையென்றும், முடிந்தால் இவர்களிடம் அந்த வகையைக் கேட்க வேண்டும் என்றும் உமையாள் நினைத்துக் கொண்டாள்.
கூடை கவிழ்த்தது போல் முடியுடன் ஒரு சிறு பெண் குழந்தை அவளைக் கடந்து ஓடியது. கால்களில் கொலுசுடன், கைகளில் வளையல்களுடன் ஓடிய அக்குழந்தை நிச்சயமாக தென் இந்தியாவைச் சேர்ந்ததுதான். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பெண் வேறு இனத்தவளாகத் தோன்றினாள். மீனாளுக்கும் காலாகாலத்தில் ஒரு குழந்தை பிறக்கவேண்டும். குணத்தில் அவளைக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
உமையாள் சிரித்துக் கொண்டாள். பிறந்தபோது வந்த குணம் பொங்கலிட்டாலும் போகுமா? தேவகோட்டையிலிருந்து இளம்பாளையம் செல்வதற்கு குடும்பத்துடன் அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்கள். பேருந்தில் ஒரே ஒரு ஜன்னல் சீட்டுத்தான் காலியாக இருந்தது. குமரன் தாவி ஏறி அதில் அமர்ந்துவிட்டான். பின்னர் ஏறிய மீனாள் இறங்கிவிட்டாள். ”ஆச்சி,நாம வீட்டுக்குத் திரும்பலாம்.”
எத்தனை கேட்டும், அவள் காரணத்தைச் சொல்லவில்லை. உமையாள் வேறு வழி இல்லாமல் பயணத்தைத் தொடராது இவளுடன் வீடு திரும்பும்படி ஆகிவிட்டது
”எனக்கு ஜன்னல் ஓரந்தான் புடிக்கும்” என்றாள் தானாகவே மீனாள்.
“ஏட்டி, அதுக்கா பயணத்தை நிறுத்திப் போட்டே. நம்ம குமருதானே, சொன்னா வுட்டுக் கொடுப்பான் இல்ல?”
“அது அவனுக்கே தெரியணுமில்ல. பின்னையும் நா ஏன் கேக்கணும்?”
“அப்படின்னா?”
“அப்படின்னா அப்படித்தான்”
“மொத்தத்தில் என்ன போகமாட்டாம செஞ்சுட்ட”என வாய் வரை வந்த வார்த்தைகளை உமையாள் முழுங்கினாள். அன்று இரவு இவளை நினைத்து கவலைப்பட்டாள்.
தன் சுகத்தை அவள் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. தாத்தா, சித்தப்பன்மார், அத்தை எல்லோரிடமும் சலுகை.
“அப்பன் முகம் அறியா புள்ளையை ஒன்னும் சலியாதே”என்று அவர்கள் மீனாளின் பக்கமே நின்றார்கள்.
கல்லூரியில் படிப்பு முடியும் வருடம்.“ஆச்சி, நான் குமரப்பனை கட்டிக்கிடலாமென நெனைக்கேன். நீ பேசுதியா, நாஞ் சொல்லட்டா?”
“என்னடி, நம்மை வைச்சு மானமா காப்பாத்தி இருக்காஹ. படிப்பு, பவிசு எல்லாமே அவங்களால. இன்னும் அரியணை கேக்குதா உனக்கு? நம்மால அவுகளுக்கு ஈடு நிக்க முடியுமா? நீ வேலைக்குப் போய் நம்ம கால்ல நிக்கலாம்னு நா கனா கண்டுட்டிருக்கேன்”
“எனக்கு வளப்பமா இருக்கணும். நீ இத்தனை காலம் உழச்சிருக்கல்ல, அதுக்கு கூலின்னு நெனைச்சுக்கோ”
தன்னை எந்த ஒரு சொந்தமும் இவ்வளவு அவமானப்படுத்தியதில்லை என அன்று முழுதும் பிறர் அறியாமல் உமையாள் அழுதாள். வென்றதென்னவோ முத்துமீனாள்தான். நாத்திக்கும் நல்ல மனம். பிள்ளையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை.
சிந்தனைத் தொடர் அறுந்து நிகழ் உலகிற்கு வந்தாள் அவள். எங்கே போய்விட்டார்கள் இவர்கள்? எத்தனை நேரம்? சலித்து எழுந்து நடந்து வெளியேறும் மையப் பகுதியில் வந்து நின்றாள். அங்கிருந்த ஒரு அழகான சிற்பம் அவளைக் கவர்ந்தது. வழவழப்பான ஒற்றைக் கரும்பாறையில் ஒரு வட்ட முகம், அதன் கழுத்துப் பகுதியிலிருந்து கிளைத்த இரு உடல்கள், அந்த உடல்களின் மார்புப் பகுதியில் ஒரு சிறு குழந்தை. பார்க்கப் பார்க்கப் பரவசமானாள் அவள். ஒருகால் இந்த மருத்துவமனை மகப்பேற்றுக்கானதோ? அப்படியென்றால், மீனாள் அதற்காகத்தான் வந்திருக்கிறாளோ? என்னிடம் சொல்லக்கூடாதா?
“உன்னை எங்கெல்லாம் தேட்றது, ஒரு இடத்துல இருக்கமாட்டியளோ இங்கிலீஷும் தெரியாது, காணாமப் போனா எங்கிட்டுன்னு பாக்க. சரி, சரி டாக்டர் விளிக்கிறாங்க, வா “
மொழி புரியாவிட்டாலும், உணர்வுகள் வெளிப்படும் குரல் காட்டிக் கொடுத்துவிடாதா, என நினைத்துக் கொண்டு உமையாளும் உடன் சென்றாள்.
டாக்டர் இள வயதினளாக இருந்தாள். சிரித்துக் கொண்டே கைகுலுக்கி பரிசோதிக்கும் படுக்கையில் படுக்கச் சொன்னாள்.உமையாள் தயங்க, “சொன்னதைச் செய்”என்று பல்லைக் கடித்தாள் மகள். ”ஒண்ணுமில்ல, மதனி, ஒரு ஜெனரல் செக்கப், பயப்படாதீய” என்றான் குமரப்பன். என்னென்னவோ பரிசோதனைகள், உமையாளிற்கு ஒன்றும் விளங்கவில்லை. வீடு திரும்புகையில் அவர்கள் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ”தம்பி, குமரு, என்னதுக்கப்பா இம்புட்டு செலவு செய்யறிஹ. நான் நல்லாத்தான இருக்கேன்,” என்றாள்.
“மதனி, மீனாளுக்கு யூட்ரஸ் பழுது. அவ கர்ப்பம் தரிக்க ஏலாதாம். அதான் உங்களுக்குப் பார்த்தம்”
“என்ன சொல்லுதீய?அவளுக்கு என்ன கொறை? ஏன் எங்கிட்ட முன்னமே சொல்லலை? நம்மூர் டாக்டரிட்ட போவோம். அதெல்லாம் சரி பண்ணிடுவாக நம்மூர்ல.”
“சிங்கப்பூர்ல்யே முடியாதுன்னுசொன்ன பொறவு நம்ம பட்டிக்காட்டுல என்ன செஞ்சுடுவாக? ஏதும் விவரமா பேசுதியா நீ?” என்றாள் மீனாள்.
“சரி, உன் கொறையை சரி செய்யமுடியாது. ஆனா, எனக்கு எதுக்கு டெஸ்ட் எல்லாம் செஞ்ச?”
“உனக்கு எல்லாம் நல்லா இருக்குதாம். நீ எங்களுக்கு மகவு சுமந்து தரணும்”
உமையாள் பேச்சிழந்தாள்.
“மதினி,பயப்படாதிக. ராணி போல பாத்துகிடுதோம்.”
“தம்பி,மெய்யாலுமே எனக்கு விளங்கல. என்னைய என்ன செய்யச் சொல்லுதீய?”
“நீ வாடகைத் தாயா இருக்கணும் எங்களுக்கு. எங்க மகவுதான் எங்களுக்கு வோணும்…”
“மேலே சொல்லாதே. நான் இதுக்கெல்லாம் ஒப்புவேன்னு எப்படி நெனைச்சீக”
“ஐய, எல்லாம் லேப்லதான் நடக்கும். உருவான கருதான் உன் கருப்பைக்கு வரும். என்ன சுமந்த மாரி நினைச்சுக்க. எனக்காக இதை செய்ய மாட்டியா என்ன?”
உமையாள் பேச்சற்று அமர்ந்தாள். ஊரிலே அவளுடைய கொழுந்தன் அவங்க வங்கியில ‘அவுட்சோர்ஸ்’ செய்யறதைப் பற்றி சொல்லி விளக்கியது இப்பொழுது நினைவிற்கு வந்தது. தந்திரமாக சிங்கப்பூர் அழைத்து வந்து, ஊரைச் சுற்றிக் காட்டி, விஷயமே சொல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தங்கள் செயல்பாடுகள் நியாயமென வாதாடும் இவர்கள் இத்தனை மட்டமானவர்களா?
“மதனி பயப்பட்டுச்சுன்னா வேணாம் மீனா. பின்னர் பாத்துக்கிடலாம்”அவன் சொல்வது கேட்டது.
“”அம்ம வளப்பமா இருக்கையில நடத்திப்புடணும். இந்த ஊர்ல யாரைத் தெரியும் அவுகளுக்கு. நாம சொல்றதைத்தான் கேக்கணும். என்னாலெல்லாம் மகவு சுமந்து சங்கடப்படமுடியாது. ஆண்டவன் சரியாய்த்தான் கொடுத்திருக்கான் எனக்கு.”
உமையாளுக்கு தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது.