மொழி என்பது என்ன? மொழியும் எண்ணங்களா? எண்ணங்களே மொழியானதா? குரலின் ஏற்ற இறக்கத்தோடு மொழி பொருள் கொள்கிறதா? அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது? பழமொழி, உவமான உவமேயங்கள், அவை பேச்சிற்கு மட்டும் இல்லாமல், எழுத்திற்கும் துணை நிற்கின்றன. லாசராவின் எழுத்தில் அவர் கையாளும் உவமைகள், அவராலேயே அனுமானிக்கப்பட்டவை, ஆழ்ந்த பொருள் கொண்டவை.
“ராஜாளி தன் சிறகுகளை விரித்துக் கொண்டு பாறையினின்று எழுவது போல, காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக் கொண்டு எழுகையில்…”(மஹாபலி). இந்த உவமை சூழலின் கனத்தைக் எப்படிக் கூட்டுகிறது பாருங்கள். ”அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்திற்குத் தயாராக இருந்தன.”
“பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்” என்றான் பாரதி. ‘காயத்ரி’யில் லாசரா சொல்கிறார், ”நீல மெத்தையில் வைர நகை புரண்டாற் போல”. இத்தனை சுவையுடன் சொல்ல இவரால் தான் முடியும். இதே கதையில் மீண்டும் ஒரு காட்சி “உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை”. தேங்காய் உடைக்கும்போதெல்லாம் நினைவில் மின்னும் இந்த வரி.
அந்தரத்தில் நின்றாடும் ஒரு ஸ்வரம்- நம் மன இழையைப் பின்னி லயிக்க விடும். இவருக்கோ, ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்ரி). ஒரு ஸ்வரம்- பல இறக்கைகள்!
“அதென்ன, கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடற மாதிரி அப்படியிருக்கு?” “சுடர் சீறிக் குதித்தது.நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அழித்துவிட்ட தூய இருளில் நான் இழைந்து போனேன்.” “அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன”. (காயத்ரி)
நீரில் நாம் வழிவழியாய் மலர்களை, தீபத்தை, உணவை, அஸ்தியை சமர்ப்பிக்கிறோம். ”காத்திருந்த கை போல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணீர்த் திரையூடே கண்டேன்.” இதில் “காத்திருந்த கை” என்ற சொற்றொடர் இல்லையெனில் அந்த உணர்வு நமக்குக் கிடைக்குமா? ”ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்பு சிரித்தது.” (அஞ்சலி )
‘இதழ்கள்-1’ மணம் மற்றும் மனம் கமழும் சொற்களைப் பாருங்கள்
“தங்க விமானத்தின் உறை கழன்று விழுந்தாற் போல், குழந்தை தூளி மடிகளிலிருந்து வெளிப்பட்டான்.”
”புகையிலைக் காவியேறிய வாய் தக்காளியரிந்த மாதிரி செவேலென்றது.”
”பூவின் மேலே பனித்துளி நிற்பது போல் அவள் விழிகளில் நிறைந்தன.”
”பல வர்ணங்களில் சர்க்கரை குழல்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு சுழித்தன.”
‘கணுக்களி‘ல்-
நாசூக்கான பேச்சு என்பதைச் சொல்ல வருகையில், ”மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சில்”
பிறரிடம் வேலை வாங்கிக் கொண்டே தான் செய்தது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களை கிண்டல் செய்கையில், “யானை சுமந்து வர, பின்னால் நரி முக்கிக் கொண்டே வந்ததாம்”
கொதிப்பதில் கமழும் மணம், ”கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி”. படிக்கையிலேயே பால் காயும் வாசம் வருகிறது. (கொட்டு மேளம்)
இது முன்னோட்டம்- வரும் நிகழ்வின் அறிகுறி என்பதை “ஆண்டாளு”வில் இப்படிச் சொல்கிறார்- “வெடித்து விட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நட்சத்திரக் கூட்டம் போல”. “ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புது சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன.”
“மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று கழுத்துக் குறுகலை கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தை கணிக்க முடியுமா?” (மாற்று)
‘புத்ர’-
“கிழக்கு நீர்த்த சாம்பல் மாதிரியிருக்கிறது. என் நீர்ப்பா? விடியலின் நீர்ப்பா?” “ திக்கற்ற சோகத்தின் கோபம் மூண்டது”
“காண்பது சுடரின் நீலமா? விஷத்தின் பச்சையா? விஷம் பச்சையா, நீலமா?”
“தாழ்வாரத்திற்கு விடியாமல் கூடத்திற்கு விடியாது”
“வார்த்தை நாக்கினின்று புறப்பட்ட அப்போதே வாயிலிருந்து ஒரு பக்ஷி இறக்கையடித்துக் கொண்டு பறந்து சென்றாற் போல்”
“சந்தனம் கரைத்து அலம்பிய கை போல”
நாம் அறியாத அல்லது எதிர்பாராத இழப்புக்களைப் பற்றி சொல்கையில், “குழந்தைக் கை பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி” (பாற்கடல்)
அடுப்பிலாடும் நெருப்பு இவரது பார்வையில் தனி எழில் கொள்கிறது. ”அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும் அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, வித விதமான உருவங்களையும், முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.” (பாற்கடல்)
“பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர் மறுப்புகள் ஒன்று இழைந்து ஒரு உண்மை. மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கலவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்துகொண்டே இருக்கும் பல கோடி, கோடானுகோடி உயிர்ச் சுக்கல்கள் நாம்.” பாற்கடலின் உயிர் கடையல் இது.
“இரண்டு வண்ணாத்திப் பூச்சிகள் ஒட்டி, நாலு இறக்கைப் பூச்சியாய் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்துஅவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.” ஒரு இயற்கை காட்சி எப்படி வண்ணம் கொண்டு மிளிர்கிறது! (வேண்டப்படாதவர்கள்)
சிரிப்பில், அட, மனிதர்களின் சிரிப்பில் வகைகள் உண்டு. இத்தனை எழில் சொற்களால் அதை சொல்ல இவரன்றி யார்?
“என் சிரிப்பு பற்றி ஓரொரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை!
“ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதிர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதனின்று உதிர்கின்றன.
“இன்னொரு சமயம் நட்டுவாக்காலிகளும், குளவிகளுமாய்க் குதிக்கின்றன.
“ஒரு சமயம் பொன்வண்டின் றக்கையடிப்பு
“ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி.
“ஒரு சமயம் கண்ணீர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணிகிணி.
“கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்.
“அடித்த பஞ்சாகிப் பிறகு, அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடாரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள், கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.” (த்வனி)
“என் சிரிப்பு சரம் போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியிழையில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று” (கஸ்தூரி)
“இது ஒரு மஹா சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய், தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி” (இதழ்கள்)
தன்னுள் முடங்கும் மனிதர்களை இவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்- “வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்டம்” (கிரஹணம்)
காட்சிப்படுத்தும் நேரத்தில் இவர் உவமைகள் எழில் அதிகம் கொள்கின்றன. “இழுத்துப் பிடித்த மூச்சுப் போல் தண்டவாளம் ஒற்றைத்தன்மையடைந்தது. தன்னைத் தானே துரத்திச் சென்றது.” (குண்டலி)
சுண்டைக்காய் கடிபடும் தோசை நான் அறிந்தது இல்லை; “தோசையில் கடிபடும் சுண்டைக்காய் போல் ‘தறுக் தறுக்’கெனும் பேச்சு.” (ஆண்டாளு)
எத்தனை முறை ரயிலைப் பார்த்திருப்போம். இவர் பார்வையே தனி. “இரவு படைத்த ஒற்றை விழி போல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் தூரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.” (கங்கா)
பெண் எனும் அழகைச் சொல்கையில், “கங்கா சூரியனின்று கழன்று பூமிக்கு ஓடி வந்துவிட்ட பொற்கதிர்” (கங்கா)
பளபளப்பான தரைகளிலும், கட்டிடங்களே முளைத்திருக்கும் பூமியிலும் சாட்டை பம்பரம் சிறுவர்களுக்குத் தெரியாது. அப்படியெனில் இதை எப்படி புரிந்து கொள்வார்களோ? “பம்பரம் வண்டாய்க் கூவிண்டு கற்பூரமாய்த் தூங்கறது” (இதழ்கள்)
“நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள்.எண்ணங்கள் உதிர்கின்றன” (ஷேத்ரம்)
…
- சித்திரச் சொல் சித்திரம்
- யாகச் சொல் சொல் யாகம்
Filed under: எழுத்து, பானுமதி ந, விமரிசனம் Tagged: லாஸ்யம் சத்யம் ராகவம்
