தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே‘ என்ற சிறுகதை காமம் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவள் பார்வையில் விரித்துச் செல்லும் கதை. சங்கப் பாடல் அறிமுகம் உள்ளவர்கள் தலைப்பைக் கண்டதும் கதையின் உட்பொருள் என்ன என்பதை உணர்ந்து கொள்வார்கள். அந்த இடத்துக்கு கதையைக் கொண்டு செல்வதில் தன்ராஜ் மணி எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்ற அளவில் இந்தக் கதை வெற்றி பெறுகிறது.
நியூ யார்க்கர் இதழில் வரும் சிறுகதைகளுடன் This Week in Fiction என்ற தலைப்பில் எழுத்தாளருடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி அதைப் பதிப்பிப்பது வழக்கம். இதை நாமும் இனி தொடர்ந்து செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தன்ராஜ் மணியுடன் ஒரு சிறு உரையாடலைத் துவக்கினோம். இனி வரும் வாரங்களில் இதை இன்னும் விரிவாக, தொடர்ந்து செய்ய எண்ணம்.
கேள்வி : ‘அணங்கும் பிணியும் அன்றே’ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தில் வாழும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்ல இதைப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்ல வேண்டும். ஏன் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
தன்ராஜ் மணி : அந்த வரி காமத்தை உண்பது, உறங்குவது போல ஒரு இயல்பான ஒரு விஷயமாக முன் வைக்கிறது. இக்கதை காமத்தை அப்படிப்பட்ட இயல்பான உயிரியல் தேவையாய் பார்க்கும் ஒரு பெண்ணுடையது, ஆகவே சரியான தலைப்பாய்ப் பட்டது. கதை நிகழும் இடத்தை நான் கணக்கில் எடுக்கவே இல்லை. கலாசார வேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய உணர்வுகள் எல்லா இடத்திலும் ஒன்றே என்பது என் பார்வை.
கேள்வி : நீங்கள் இந்தக் கதையை எழுத எது காரணமாயிற்று? (இந்தக் கதையின் ஊற்றுக்கண்/ தோற்றுவாய் என்ன?)
தன்ராஜ் மணி : சில மாதங்களுக்கு முன்பு சங்க இலக்கிய பாடல்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.
மிளைப் பெருங்கந்தனின் கீழ் வரும் பாடலுக்கு ஒரு சுவாரசியமான உரை அதில் இருந்தது. அதன் சாராம்சம், காமம் விருந்தாவது நம் மனதில், மனநிலையில், புற விஷயங்களில் அல்ல என்பது. முதிய பசு புல்லைச் சாப்பிட முடியாவிட்டாலும் ஆவலாய் அதைச் சுவைப்பதை முன் வைத்து உரையாசிரியர் அவ்வாறு சொல்லி இருந்தார்.
“Tools and means are not but the mindset is all it matters” என்பது எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அதுவே முதல் தூண்டுதல், தோற்றுவாய். இங்கிலாந்தில் காமத்தைப் பற்றி இவ்வகை வாழ்க்கை நோக்கு கொண்டவர்கள் ஏராளம், ஆகவே கதை நிகழும் இடத்தை இங்கிலாந்தாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
Filed under: உரையாடல், எழுத்து, தன்ராஜ் மணி, பிற
