செங்கல்பட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் -சகோதர பூசலினால் யாரும் பயன்படுத்தாத – காலி மனையொன்றும், அதன் ஒரு புறம் பங்களா பாணியிலான, யாரும் வசிக்காத வீடொன்றும், இன்னொரு புறம் முதியவர் ஒருவர் மட்டுமே வசிக்கும் பழமையான சத்திரமும் இருந்தது. சிறுவர்களான எங்களுக்கு இந்தச் சூழல் தந்திருக்கக் கூடிய உற்சாகத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.
அந்த வீட்டில் சில பல பேர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாகவும் பேய் ஒன்று உலவுவதாகவும் ஒரு புரளி தெருவில் உலவியது. இந்திய பேய்களின் தேசிய உடையான வெள்ளைச் சேலையில் இல்லாமல் கறுப்புப் புள்ளிகள் நிறைந்த மஞ்சள் நிற புடவையில் உலா வருவதாக புரளியை கிளப்பி விட்டவனின் கற்பனை வளம் இன்றும் வியப்பளிக்கிறது. அப்பேய் வழக்கம் போல் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உலவியதா அல்லது விசேஷ தலையலங்காரம் ஏதேனும் செய்திருந்ததா என்பது குறித்து இப்போது எனக்கு சரியாக நினைவில்லை.
இப்படிப்பட்டச் சூழலில், மனையில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து பங்களாக்குள் சென்று விட்டால் அதை எடுத்து வருவதை சாகசமாகவே கருதினோம். ஒருமுறை அப்படி பந்தெடுக்கச் சென்றபோது எலும்புத் துண்டு ஒன்று தட்டுப்பட அதை மனித எலும்பென்று முடிவு செய்து , யார்/ எப்படி கொலை செய்யப்பட்டார்கள், யார் செய்தார்கள் என்றெல்லாம் எங்களை நாங்களே துப்பறிவாளர்களாக பாவித்து சில நாட்கள் அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்து, ஏதேனும் உடல் தெரிகிறதா -அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் யோசிக்கலாம் – என்றும் பார்ப்போம்.
எட்டாம் வகுப்பு ஆண்டுப் பரீட்சை முடிந்த அந்த கோடை விடுமுறையில் அந்த பங்களா கிளப்பாக மாற்றப்படுகிறது என்று அறிந்தோம். கிளப் என்றவுடன் எங்கள் மனக்கண்ணில் தோன்றிய வண்ண வண்ண விளக்குக்கள் , காபரே, சீட்டாட்ட, குடிகாரச் சண்டைகள் இவையெல்லாம் இல்லாமல், ஒரு சிறு போர்ட் மட்டும் தொங்க விடப்பட்டு, மாலையில் சிலர் வந்து எந்த பிரச்சனையும் செய்யாமல் செல்வது மட்டுமே நடந்தது எங்களுக்கு சற்று ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அப்போது தான் அவன் கிளப்பில் வேலைக்குச் சேர்ந்தான்.
செங்கல்பட்டிற்கு அருகிலிலுள்ள கிராமமொன்றில் இருந்து வந்திருந்த அவன் எங்களைவிட ஓரிரு வயது மூத்தவன். ஏதோ ஒரு கட்டத்தில் -நாங்கள் பந்தை கிளப்பில் இருந்து எடுக்க சென்ற போதாக இருக்கலாம் – எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவனுடைய தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி இருந்தார். சித்திக் கொடுமையெல்லாம் இல்லையென்றும், தனக்கு படிப்பில் விருப்பமில்லாததனாலும், வறுமை காரணமாகவும் தெரிந்தவர் மூலம் இங்கு வேலைக்கு சேர்ந்ததாகச் சொன்னான். அங்கேயே தங்கி இடத்தை சுத்தப் படுத்துவது, கடையிலிருந்து வேண்டிய பொருட்களை வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வந்தான்.
எப்போது என்ன வேலை வரும் என்று சொல்ல முடியாததால் அவன் தினமும் எங்கள் விளையாட்டில் கலந்து கொள்வான் என்று சொல்ல முடியாது, சில நேரங்களில் பாதி விளையாட்டில் சென்று விடுவான். ஓரிரு நாட்கள் அவனைக் காணவே முடியாது, அல்லது அவன் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். ஆனால் மீண்டும் எப்போது அவன் எங்களுடன் கலந்து கொண்டாலும், அந்த இடைவெளியே தெரியாதவாறு, தொடர்ந்து எங்களுடன் பழகிக் கொண்டிருப்பவன் போல சேர்ந்து கொள்வான். பந்து வீச்சு, பேட்டிங் செய்வது, விக்கெட் கீப்பிங் என அனைத்தையும் அனாயசமாக செய்தான். நாங்கள் கூச்சலிட்டபடி ஒவ்வொரு பந்தையும், ரன்னையும், விக்கெட்டையும் எதிர்கொண்டிருக்க , 1 ரன் மட்டுமே எடுத்தாலும் அதையும் எந்த பிரயத்தனமும் இல்லாமல் செய்த உணர்வையே அவன் தருவான். அவன் களத்தில் இருக்கும் போது எங்கள் கிரிக்கெட் திறனைக் குறித்த தாழ்வுணர்ச்சியை உருவாக்கி விடுவான். கிளப்பில் உள்ள மற்ற வேலையாட்களுடனும் கூட மிக இயல்பாகவே அவன் பழகுவதை பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் யாரும் விளையாட இல்லாத போதும் வீட்டின் பின்புறச் சுவற்றில் உட்கார்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன்.
அந்த இடத்தில் தனியே அமர்ந்திருப்பது நாங்கள் அந்த வீட்டிற்கு குடிவந்ததில் இருந்து எனக்கிருந்த பழக்கம். காலி மனையின் ஒரு ஓரத்தில் இரு தென்னை மரங்களும், பஞ்சு மரம் ஒன்றும் இருந்தன. யாரும் கவனிக்காததால் பஞ்சு தானே வெடித்து தென்னை மரத்தின் காற்றில் பறக்கும்போது அவற்றைப் பிடிக்க முயல்வேன். இரவு நேரத்தில் சில நேரங்களில் அங்கு மின்மினிப் பூச்சிகள் தென்படும், அவற்றை ஜாடியில் அடைக்க நினைத்தாலும், இரவு நேரத்தில் அந்த மனைக்குச் செல்ல வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். அங்கு முளைத்திருக்கும் புதர்களில் பட்டாம்பூச்சிகள் வந்தமரும். நான் ஆறாவது படிக்கும்போது ஏதோவொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, அவற்றைக் கையாலேயே பிடிக்க முயன்று (அவற்றை பிடிக்க பயன்படும் வலையை இன்றுவரை நான் நேரில் பார்த்ததில்லை அலர்ஜி ஏற்பட்டு) -ஏதேனும் பூச்சி கடித்திருக்க வேண்டும் -, வீட்டில் கடும் திட்டு வாங்கினேன். அத்துடன் இயற்கையியலாளர் ஆகும் என் முயற்சி முடிவுக்கு வந்தது. இத்தகைய ஒரு இடத்தில் நாங்கள் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடினோம் என்பதை நினைக்கும்போது இப்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. நான் கற்பனையில் செய்யும் சாகசங்களை அரங்கேற்றும் இடமாகவும் அது இருந்திருக்கிறது. யாருமற்ற மனையை பார்த்தபடி என் வீர தீர பராக்கிரமங்களை மனதில் சொல்லிக்கொண்டிருப்பேன்.
அந்த விடுமுறையில் அடுத்த தெருவில் இருந்த முரளியிடம் சில ஸ்டாம்ப்களை பார்ப்பதற்காக வாங்கியிருந்த நான் அவற்றை தொலைத்து விட்டேன். அவற்றுக்கீடாக அதே மதிப்பில் உள்ள சில ஸ்டாம்ப்களை தருவதாக சொல்லியும் அவன் கேட்காமல் 3 ருபாய் தர வேண்டும், இல்லையென்றால் வீட்டிற்கு வந்து சொல்லி விடுவேன் என்று கறாராக கூறி விட்டான். 80களின் இறுதிப்பகுதிகளில் மத்தியதர குடும்பப் பையனிற்கு 3 ருபாய் என்பது பெரிய தொகை என்பதால் நான் மிரண்டு விட்டேன். இதைப் பற்றி நான் அந்தப் பையனிடம் புலம்பிக்கொண்டிருக்க, முரளியிடம் தான் பேசுவதாக சொன்ன அவன் அதன் படியே பேசி, நான் தொலைத்தவற்றுக்கு ஈடாக மாற்று ஸ்டாம்ப்களை ஏற்கத் செய்து விட்டான். இத்தனைக்கும் அவனக்கு ஸ்டாம்ப் பற்றி எதுவும் தெரியாது, நான் முரளியிடம் முதலில் என்ன சொல்லி அது ஒப்புக்கொள்ளப்படவில்லையோ, அதையேதான் அவனும் கூறினான். ஆனால் அவன் சொன்னதை முரளி ஏற்றுக்கொண்டான் என்பது தான் விஷயம் (இதை என்னுடைய அசமஞ்சத்தனத்திற்கான பால்ய கால நிரூபணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்) .
இப்போது யோசிக்கையில் இப்படி எந்த (பழகிய/பழகாத) சூழ்நிலையிலும் தன்னை எந்த பிரயத்தனமும் இல்லை எளிதில் பொருத்திக் கொள்ளும் குணம் தான் அவனுடைய சிறப்பம்சம் என்று தோன்றுகிறது. அதனால் தான் சத்திரத்து தாத்தாவுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
70 வயதிற்கும் மேல் இருந்திருக்கக்கூடிய அவருக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வையுண்டு. அவரைப் பற்றியும் சில சுவாரஸ்ய புரளிகள் தெருவில் உலவின. பந்து சத்திரத்தினுள் சென்றால் எடுக்கச் செல்லும் போது அவரைப் பார்ப்போம். அதட்டவோ, மிரட்டவோ செய்யாமல் எங்களை பந்தை எடுத்துச் செல்ல அனுமதிப்பார். எனினும் அவருடன் நாங்கள் பேசியதெல்லாம் இல்லை, எனவே இவன் அவரைக் குறித்து சொன்ன விஷயங்கள் எங்களுக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்ததன. தாத்தா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவராம். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதால், அவர்களுடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து வந்து விட்டார். அவர் பங்காக கிடைத்தவற்றை மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவழித்து விட , அந்த – இப்போது யாரும் வாடகைக்கு எடுக்காத – பழமையான சத்திரம் மட்டுமே அவரிடம் இருந்தது. அங்கேயே தங்கி, சமைத்து, மீதியிருக்கும் சிறு கையிருப்பை வைத்துக் கொண்டு, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். இவற்றை விட அவர் பார்வை போன விதம் பற்றி அவன் எங்களுக்குச் சொன்னது தான் எங்களை நெகிழ்த்தியது. சிறு குழந்தையொன்றை விபத்திலிருந்து காப்பாற்றும் போது தான் இப்படியானதாம்.
இதையெல்லாம் கேட்டப் பின் மிகவும் ஆர்வமுண்டாக, அவனுடன் அவரைச் சந்தித்தோம். ஆனால் எங்களைக் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்ட அளவிற்கு தன்னைக் குறித்து அதிகம் பேச அவர் விரும்பவில்லை. சுதந்திர போராட்டத்தில் அவர் பங்களிப்பு, பின்னர் அவர் ஆற்றிய சேவைகள் பற்றி “சொல்ல பெருசா ஒண்ணும் இல்லை” என்று கடந்து சென்று விட்டார். குழந்தையை காப்பாற்றியதைக் குறிப்பிட்டு “நீங்க ஒரு ஹீரோ தாத்தா” என்று மணி சொன்ன போது மட்டும் “அப்படிலாம் இல்லை, அந்த நேரத்துல நான் எதையுமே யோசிக்கல, அந்த நேரத்துல தோணினதை செஞ்சேன் அவ்வளவு தான்” என்று பதிலளித்தார். அதன் பின் தாத்தா குறித்து நாங்கள் எப்போதும் கேட்டாலும் அவனும் பிடி கொடுக்காமல் தான் பேசினான்.
(அவன், தாத்தா என்றே இருவரையும் குறிப்பிடக் காரணம் அவர்களிருவரின் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை என்பதால் தான். சொல்லப்போனால் தாத்தாவின் பெயரை அப்போதே கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தப் பையனைப் பற்றி பல விஷயங்கள் ஞாபகத்தில் இருந்தும் பெயரை மட்டும் எப்படி மறந்தேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருவருக்கும் ஏதேனும் பெயர் வைக்கலாம் என்று தான் நினைத்தேன். இதைப் பற்றி பெரியவர் முற்றுப்புள்ளியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்தான், உனக்கு எப்படி ஞாபகம் வருகிறதோ அப்படியே எழுது, என்றார். தான் நிஜத்தில் பார்த்ததை, உணர்ந்ததை, உண்மையின் வீச்சு உள்ளதை மட்டுமே எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவர் அவர். அதில் எனக்கு முழுதும் ஏற்பு இல்லையென்றாலும், இந்தக் கதையைப் பொறுத்தவரை பெயரைக் குறிப்பிடாமல் சொல்லும் போது, விலகலும் நெருக்கமும் கொண்ட நினைவுகள் குறித்த நகைமுரண் கிடைப்பதாக தோன்றியதால் அப்படியே செய்தேன். பொதுவாக ஏன், எப்படி எழுதினேன் என்றெல்லாம் கோனார் உரை போடுவதெல்லாம் இலக்கியத்தில் தேவையில்லை என்று நினைப்பவன் நான். இருந்தாலும் முற்றுப்புள்ளியின் உதவியை பதிவு செய்ய வேண்டுமென்பதால் இதை எழுதுகிறேன். மேலும், இதைப் பார்த்து அவருக்கும் தன் கதைகளைப் பொதுவும் பகிரும் எண்ணம் தோன்றக் கூடும் என்றும் எதிர்பார்க்கிறேன்).
இதையெல்லாம் படிக்கும் போது இந்தச் சம்பவங்கள் பல காலமாக நடந்து வந்தவை போல் தோன்றினாலும், உண்மையில் அந்தக் கோடை விடுமுறை, பின் பள்ளி திறந்து 3-4 மாதங்கள, என்ற காலகட்டத்திற்குள்ளேயே இவையனைத்தும் நிகழ்ந்தன. ஒரு வாரஇறுதியில் ஊருக்குச் சென்ற அவன் திரும்பி வரவில்லை. முதலில் அதை கவனிக்காத நாங்கள் ஓரிரு வாரங்கள் கழித்தே- பந்தை எடுக்க சத்திரத்திற்கு செல்லும் போது அவனைக் குறித்து தாத்தா கேட்டதும் தான் – உணர்ந்தோம். கிளப்பில் வேலை செய்பவர்களிடம் கேட்க எங்களுக்கு பயம் அல்லது கேட்கத் தோன்றவில்லை, ஒன்றிரெண்டு மாதங்களில் அவனை கிட்டத்தட்ட மறந்து விட்டோம், அவனில்லை என்பதால் தாத்தவுடனும் பேச்சு இல்லாமல் போனது. அவரும் பிறகு அவனைப் பற்றி எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. சில மாதங்களில் வரவு இல்லையென்று கிளப்பையும் மூடி விட்டார்கள். மீண்டும் யாருமற்றுப் போனாலும், அங்கு மனிதர்களின் நடமாட்டத்தைப் பார்த்தப் பிறகு, அந்த இடத்தை குறித்த நாங்கள் உருவாக்கி வைத்திருந்த மர்மங்கள் அர்த்தமற்றதாக தோன்ற முன்பைப் போல பேய், எலும்புகள் என்று பங்களவைக் குறித்த கிளர்ச்சிகளை எங்களால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.
பத்தாவது பொது தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில், தாத்தா காலமாகி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. இரவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. நாங்கள் பள்ளிக்குச் சென்று விட்டிருக்க, அன்றே அவர் சொந்தக்காரர்கள் இறுதிச் சடங்குகளை செய்து விட்டார்கள் என்று தெருவில் பேசிக்கொண்டார்கள். இவையெல்லாம் எங்களுக்கு அடுத்த நாள் தான் தெரிய வந்தது. சில நாட்கள் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு, பரீட்சை, இன்னொரு கோடை விடுமுறை கொண்டாட்டம் என்று அவரையும் கடந்து சென்று விட்டோம்.
பதினொன்றாம் வகுப்பில் என்.என்.ஸில் சேர்ந்தேன் ( சேர்க்கப்பட்டேன் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்). என்.என்.எஸ் சார்பில் எங்களூரில் இருந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அரைநாள் முகாமிற்கு ஒரு ஞாயிறன்று சென்றோம். அன்றைய முதல் அதிர்ச்சியாக அந்தப் பையனை அங்கு சந்தித்தேன். என்னுடைய வியப்பிற்கு நேர்மாறாக எப்போதும் போல் இயல்பாகவே என்னை அவன் எதிர்கொண்டு, இங்கு எப்படி வந்தான் என்பதைச் சொன்னான். சிறுவயதிலிருந்தே அவனுடன் படித்த சிறுமியுடன் அவனுக்கு நெருங்கிய நட்பிருந்தது (காதல் என்றெல்லாம் அவன் சொன்னது போல் ஞாபகம் இல்லை, பிரியத்துக்குரியவள் என்று மட்டும் பொருள்படும்படியான வார்த்தைகளை அவன் உபயோகித்தான் என்று நினைக்கிறேன்). அவளை கூடப் படித்த இன்னொரு மாணவன் கிண்டல் செய்திருக்கிறான். இவன் ஊருக்குச் சென்ற அந்த வார இறுதியில், இது குறித்து அவனுக்குத் தெரிய வர, அந்த மாணவனை எதிர்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் பேச்சு முற்றி அந்த மாணவனை மிரட்ட இவன் அடிக்கப் போக, அவன் தலையைத் திரும்பியதால் பின் மண்டையில் அடி பட அம்மாணவன் இறந்து விட்டான். இவன் இங்கு சேர்க்கப்பட்டான். “அவனை கொல்லணும்லாம் யோசிக்கல, அவ பிரச்னையை தீர்க்கணும்னு நெனச்சேன், இப்படியாகிப் போச்சு” என்று சொன்னவன், கிளப் குறித்தும், மற்ற நண்பர்கள் குறித்தும் கேட்டான். பிறகு தாத்தா எப்படி இருக்கார் என்றவனிடம், அவர் மறைவைப் பற்றிச் சொன்னேன். அடுத்த வியப்பான செய்தியாக தாத்தா குறித்து அவன் என்னிடம் சில விஷயங்களை சொன்னான்.
இவன் திரும்பி வராததால், கிளப்பிற்குச் சென்று விசாரித்த தாத்தா நடந்ததை அறிந்து, இவனுடன் தொடர்பு கொண்டு, அவ்வப்போது இவனைப் பார்க்க சீர்திருத்தப் பள்ளிக்கு வருவாராம். இவன் இங்கு சேர்க்கப்பட்ட பின் இவனைப் பார்க்க எப்போதேனும் மட்டுமே வந்து கொண்டிருந்த இவன் தந்தை, சில மாதங்களிலேயே யாருக்கும் எதுவும் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றதையும் தாத்தாதான் -அவன் தந்தையைத் தேடி ஊருக்குச் சென்ற போது இதை அறிந்து – இவனிடம் சொல்லி இருக்கிறார். அதன் பின் அவருடைய வருகை மட்டுமே அவனுக்கிருக்கும் ஒரே ஆசுவாசமாக இருந்திருக்கிறது. சில மாதங்களாக தாத்தா ஏன் வரவில்லை என்று குழம்பி இருந்தவன், நான் சொன்னதைக் கேட்டு நொறுங்கி விட்டான். “நீ திரும்பி வந்ததும் நல்ல வழி பண்றேன்” என்று தாத்தா சொன்னதாக சொல்லும் போது உடைந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க விட ஒருவாறு அவனை தேற்றினேன். அவன் சமநிலை குலைந்ததை அப்போது தான் பார்த்தேன். நாங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வர, மீண்டும் வந்து பார்பதாகச் சொல்லி விடை பெற்றேன்.
அவனுடைய சுபாவம் அவனை அவனிருந்த சூழலில் இருந்து மீளச் செய்தது என்று சொல்ல விரும்பினாலும் நீங்கள் இந்நேரம் சரியாக யூகித்திருப்பதைப் போல, அவனை நான் மீண்டும் சென்று பார்க்கவில்லை. இருந்தாலும் அவனை பார்க்கச் செல்லாத குற்றவுணர்ச்சியை மட்டுப்படுத்த அவன் மீண்டிருப்பான் என்றே நம்ப விரும்புகிறேன். படிப்பின் அழுத்தம், வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் என என் செய்கைக்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லலாம் என்றாலும், உண்மையில் அவனையும் தாத்தாவையும் எங்கள் அன்றாட வாழ்வின் ஒரு ஓரத்தில் இருப்பவர்களாகவே எங்களின் ஓட்டத்தில் அவ்வப்போது நின்று, பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்க்கப்படவேண்டியவர்களாகவே அணுகினோம் என்பதே உண்மை (தாத்தா இதை உணர்ந்திருந்ததால் தான் பல ஆண்டுகள் அருகிலேயே வசித்த எங்களை விட, புதிதாய் வந்த அவனிடம் சில நாட்களிலேயே நெருக்கமாக உணர்ந்திருக்க வேண்டும்). ஆனால், அவனை இறுதியாகப் பார்த்த அன்று ஊரே -80களில் தமிழ்நாட்டில் எந்தவொரு வார இறுதியின் மிக முக்கிய நிகழ்வான – ஞாயிறு மாலை தமிழ் படத்தில்- ஐக்கியமாகி இருக்க, நான் மட்டும் வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்து, ஆகஸ்ட் மாத மாலை நேர தென்றலை எப்போதும் போல் அனுபவிக்க முடியாமல், யாரும் இருந்ததற்கான தடயமே இல்லாதிருந்த பங்களாவையும், சத்திரத்தையும் அவற்றினிடையே இருந்த வெற்று மனையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
Filed under: எழுத்து, காலத்துகள், சிறுகதை
