அந்த அழகிய வெளிநாட்டு கார் அமுதாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சீருடை அணிந்த ஓட்டுனர் அம்மாவிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் செல்வது தெரிந்தது. கார் மீண்டும் கிளம்பவில்லையென்பதால், காத்திருப்பதாகச் சொல்லியிருப்பார் போலும்.
அம்மா, மணியை அழைத்து நல்ல டீயாக வாங்கிவரச் சொல்வது கேட்டது.
தனக்கு கேட்கவேண்டும் என்றே அம்மா கத்திப் பேசுவது புரிந்தது. ”நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்”
அமுதா தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இடமும் வலமும் மாறித் தெரிவது தானா, தன் நிழலா? இதுவும் காட்சிப் பிழையோ? பிரதிபலித்து எல்லாவற்றையும் நிஜம்போல் காட்டும் இதிலெது உண்மை? கண்ணாடியை உடைக்கும் ஆவேசம் அவளுள் எழுந்தது. ஒருகால், இந்தக் கண்ணாடியைப் பார்ப்பது இதுவே கடைசி முறையோ?
உடைந்து சிதறும் கண்ணாடி காட்டும் சிதறிய அமுதாக்கள் ஒன்றிலிருந்து பலவாய் உருக்கொண்டு அவளையே காட்டிச் சிரிக்கும் என்பதைத் தவிர வேறென்ன பலன்? அழக்கூட தெரியாமல் போய் விட்டதே!
கேமராவின் முன்னே அழுதழுது இன்று நிஜக் கண்ணீர் வரமாட்டேன் என்கிறது. அப்படியும் தான் என்ன கதாநாயகி நடிகையா? ஒரிரு காட்சியில் ஓரிரு வசனம் பேசும் துணை நடிகை! அமுதா சிரித்துக் கொண்டாள் .என் மீது அவர் பார்வை எப்படி விழுந்தது? எதனால் இந்த சிக்கல்? அம்மா இதைக் கேட்ட தினத்திலிருந்து தரையில் கால் பாவாமல் நடக்கிறாள். பொருளே ஆதாரமாக வாழும் நிலை அம்மாவிற்கு.பதினைந்திலிருந்து பத்து வயதுக்குட்பட்ட தம்பியும், தங்கைகளும் அம்மாவின் கடுகடுப்பினால் வாய் விட்டு சிரிப்பது கூடக் கிடையாது. ஆனால் வீட்டில் இப்பொழுது அடிக்கடி சந்தோஷக் கூச்சல் கேட்கிறது. தங்களுக்குள் செல்லமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
நேற்று இரவு அம்மா தன்னை நேரே பாராது சொன்னது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “இனியாவது ஓர் இடம் நிரந்தரம் என இருக்கக் கசக்கிறதா? எம்மாம் ஷூட்டிங்க்கு, அப்பாலே எம்மாம் பேரு! எல்லாத்தையும் விட்டுப்புட்டு போவியா அவன் உன்னைய வரச் சொல்லரச்சே. இன்னாமோ மனப் பீடமாம், மாட்டாளாம்.நாயி நக்கித் தான் குடிக்கும்”
அம்மா சண்டையிடுகிறாள், எச்சரிக்கிறாள், தான் கன்னியில்லை என்று குத்திக் காட்டுகிறாள். அம்மா சொல்லாத ஒன்றும் இதில் இருக்கிறது. அது எதிர்காலம் பற்றிய இவளின் பயம். இவர் விருப்பத்தின் படி தான் நடந்து கொள்ளாவிடில் இவள் நடிப்புத் தொழில் இல்லாமலே போய்விடும். அது இல்லையென்றால் பின்னர் எதுவும் இல்லை. ஐந்து உயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் மரம் நட்டவர் அவர்தானோ என்னவோ? ஆமாம், அவரை நான் எத்தனை உயரத்தில் வைத்திருக்கிறேன், அவரால் தவறே செய்ய இயலாது, கண்ணியக் குறைவாக நடக்க முடியாது என்று?.இப்பொழுது எனக்கு உறுத்துவது எது நிஜமா, நிழலா?
நிஜம் எனில் எது? இன்று வந்து காத்து நிற்கும் காரா? நிழல் திரையில் பார்த்த அவரது ஒளி பிம்பமா? நிழல் காட்டிய நிஜம் என்கே? நிழலாடும் நிஜம் அல்லது நிஜமாடும் நிழல்! எதிலிருந்து எது? உடைத்துக் காட்டும் கண்ணாடி சிதறல்கள்.
அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.
தொலை தூரத்தில் தொடுவானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!
அம்மா அவளை அழைப்பது கேட்டது.
அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.
தொலை தூரத்தில் தொடு வானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!
அம்மா அவளை அழைப்பது கேட்டது.
Filed under: எழுத்து, சிறுகதை, பானுமதி ந
