“எதற்காக எழுதுகிறேன்?” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்டு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா?” “புகழ் கிடைக்குமா?” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா?” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty?” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.
இப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-
எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.
குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர் உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).
நான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.
அப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.
இவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
எழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.
இப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. ஏன்?
இப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:
பணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு?
புகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்? அப்போ வேறு எதற்கு?
மனநிறைவு – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.
எழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்கும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பது?எண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது? முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது? சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.
மேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.
இது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே தவிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.
என் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.
என் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு? ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்!.
Filed under: எதற்காக எழுதுகிறேன், எழுத்து, பிற, மு வெங்கடேஷ்
