மினுக்கட்டாம் பூச்சிகள் இப்பொழுது பறந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தெருவில் இப்படியொரு காலியிடமும், மரங்களும், கொடிகளும், முட்புதர்களும் யாரும் எதிர்பார்க்க முடியாததுதான். ஆனால் இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அது அப்படித்தான் இருக்கிறது. மருதாணி மரமும், கொன்றையும், கொடுக்காபுளியும், போகன் வில்லா மரங்களும் பசலைக் கொடியும், சங்குக் கொடியும் இன்னமும் புதர்களிடையே இருக்கின்றன.
இவனும், செந்திலும், தேவியும் விளையாடிய இடங்கள். அப்பொழுது சிறிதாக முள்மரங்கள் இருந்தன. இன்று பெரிதாக நிற்பதைப் போல் தோன்றுகிறது. தான் கொடுத்த கசப்பு , தன்னைத்தானே வெறுக்கச் செய்கிறது.
மாலை மயங்கும் சமயம் வரை அவனும், தேவியும், செந்திலும் அங்கே சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். வீட்டை ஏமாற்றிவிட்டு இந்தப் புதர்களில் மினுக்கும் மின்மினிகளைத் துரத்துவார்கள். முள் கிழித்தாலும் கவலையில்லை. மயக்கும் மின்மினிகள். அந்திக் கருக்கலில் அந்த வெளிச்சம், மின்னி மின்னி மறையும். அவைகள் ஒரு திசை நோக்கி பறக்கையில் என்ன ஒரு அழகு.! ஆனால் கையில் சிக்காமல் ஓடி விடும் பூச்சிகள். இப்பொழுது செந்திலும், தேவியும் எதிரே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மூவரும் கைகள் பற்றிக்கொண்டு தட்டாமாலை சுற்றினால், கசப்பு உதிராதா? “காலம் கனிந்தது என்று ஆடுவோமே, கசப்பு போனதென்று ஆடுவோமே” அவனையும் அறியாமல் கண்களில் ஈரம் படர்ந்தது.
“சூடு வைக்கிறேன் பாரு,ஆம்பளைப் பிள்ளையோடு உனக்கென்னடி விளையாட்டு” என்பதையெல்லாம் அவள் கண்டு கொள்ள மாட்டாள். அடி வாங்கிக் கொண்டே ஓடி வருவாள். அம்மாவை ஏமாற்றிவிட்டு வருவது இவனுக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால் செந்தில்தான் பாவம். தம்பிகள், தங்கை அப்பா அனைவரும் கவனியாமல் வரவேண்டும். எப்பொழுதுமே லேட்டாக வருவதை இவனும், தேவியும் “செங்கோட்டை பாசஞ்செர்” என்று கிண்டல் செய்வார்கள். அவன் சிறிது ரோஷப்படுவான்.அப்புறம் விளையாட்டில் எல்லாம் மறந்து விடும்.
இத்தனைக்கும் நடுவில் தேவி இருவருக்கும் ஸ்பெஷல். அவள் என்ன நினைத்தாள் என்று இவனுக்கு இன்று வரை புதிர்தான். அவள் சமமாக நினைத்திருக்க வேண்டும். சில நாட்களில் அவள் வராவிட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றியதுண்டு. இந்த விசித்திர மன நிலை இன்றும் புரியவில்லை. எதிர்பார்க்கும் நிலை, அடைவதை விட உயர்ந்ததோ, என்னவோ? ஆனால் ஏக்கமும் தலை தூக்கும். பட்டாம்பூச்சியைப் போல், பாவாடை சுழல அவள் ஓடி வருவதைப் பார்க்கையில் இவளையா வர வேண்டாம் என நினைத்தோம் என்று குற்ற உணர்வு தோன்றும்.
அன்று நல்ல கோடை நாள். திடீரென்று மேகம் திரண்டு ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. அம்மா எண்ணை சட்டி வைத்து பஜ்ஜி போடத் தொடங்கினாள். அவள் அறியாது கை நிறைய பஜ்ஜியை அள்ளிக் கொண்டு இவன் ஓடினான். கையோ சுடுகிறது, அவசரத்தில் ஒரு காகிதம் கூட எடுக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்னும் சற்று தொலைவுதானே, அவளை இன்று அசத்தவேண்டும், எப்படியும் செந்தில் தாமதமாகத்தான் வருவான். இந்த நினைப்பில் சென்றவனுக்கு ,அவர்கள் இருவருமாக ஆலங்கட்டி பொறுக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
“இந்தாரு, என்ன கொணந்திருக்கேன் பாரு”
தேவியை முந்திக் கொண்டு செந்தில் கூவினான் “பஜ்ஜியாடா, கொட்றா, கொட்றா”.
“அஸ்கு,புஸ்கு, இது எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான்.போடா, உன் அம்மாவை சுடச் சொல்லி தின்னு”
செந்தில் அடிபட்டவன் போல் பார்த்தான்.திரும்பிப் பார்க்காது ஓடினான்.
“ச் சீ.. உன் பஜ்ஜி ஆருக்கு வேணும்? நீயே தின்னு. அவனை விரட்டிப்புட்டேல. இனி என்னோட பேசாதே, ஆமா ஆணை” சொல்லிக் கொண்டே அவள் ஓடிப்போனாள்.
இவன் விக்கித்துப் போனான். கையிலிருந்து பஜ்ஜிகள் மண்ணில் விழுந்தன.முதுகில் சொடெர் சொடெரென்று மழை அடித்தது. மின்னுக்கட்டாம் பூச்சிகள் இல்லை. தந்திக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினான்.
Filed under: எழுத்து, சிறுகதை, பானுமதி ந
