விண்மீன்களின் வருகை
விண்மீன்களின் எண்ணிக்கை இன்று இத்தனை
அவை முட்டையிடுமா குட்டி போடுமா
அவற்றின் ஆயுட்காலம் என்ன
அப்பா, அம்மா, குழந்தை விண்மீன்களை
அடையாளம் காண்பது எப்படி
ஒவ்வொருவரின் பெயரும் என்ன
இரவு நாம் உறங்கியபின்
எந்த பள்ளிக்குச் செல்லும்
சிறு விண்மீன்கள்
பகலில் அவர்களனைவரும்
உறங்கச் செல்லுமிடம் எது-
விண்மீன்கள் குறித்த அனுவின் விளக்கங்களை
கேட்டப்படி அவள் அம்மா உறங்கிவிட
விண்ணில் செவி சாய்த்தபடி
நட்சத்திரங்கள்
நட்சத்திரங்களுக்கு கதை சொல்லும் சிறுமி
வீட்டின் பெரியவர்கள் உறங்கியபின
கண்சிமிட்டியபடி நட்சத்திரங்கள்
அனுவின் அறைக்குள் நுழையும்
அவள் மடியில் தலைசாய்த்தும்,
அருகில் மெத்தையில் படுத்தும்,
அறையில் இடம் கிடைக்காதவைகள்
சாளரத்துக்கு வெளியே மிதந்தபடியும்
கதை கேட்கத் தயாராகின்றன.
சாகசங்களும் குதூகலமும் நிறைந்த,
தேவதைகள் கோலோச்சும் கதைகளை
அனு சொல்லிக்கொண்டிருக்க
அந்நேரம் விண்ணெழும் கதிரவனிடம்
அரை நாழிகை இரவல் வாங்கி
கதை கேட்டு முடித்த பின்
முத்தமிட்டு நன்றி சொல்லி
மீண்டும் இரவு வருவதாக உறுதி கூறி
விண்மீள்கின்றன நட்சத்திரங்கள்.
துயிலெழுப்ப வரும் அனுவின் அம்மா
அவளின் உறங்கும் முகத்தில்
புன்சிரிப்பைப் பார்த்து
மகள் கனவு கண்டுகொண்டிருப்பதாக
நினைத்துக் கொள்கிறார்
நட்சத்திரங்களின் பரிசு
அனுவிற்கு புதிய தோழி கிடைத்து விட்டாள்
கதை கேட்டு அவளுடனேயே
தங்கி விட்ட நட்சத்திரத்தை
விரலில் மோதிரமாக மாற்றி
அதன் ஒளிர்வை
விழிகளில் குடியேற்றி
தான் செல்லும் வழியெங்கும்
மின்மினிகளை தூவிச் செல்கிறாள்
இரவில் தன் தோழியுடன்
விண்ணுலா சென்று
நட்சத்திரங்கள் அருந்தத் தரும்
நிலவின் பால் ஒளியை
பருகும் அனுவின்
உதட்டில் உறைந்துள்ள
பால் துளி
எப்படி வந்ததென
புரியாமல் திகைக்கிறாள்
அவள் அம்மா
Filed under: எழுத்து, கவிதை, காலத்துகள்
