கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்: ஹ ஹ ஹ ஹ ஹ. காலேஜ் முடிச்சிட்டு உத்தியோகம் கிடைச்சிருக்கற ஸ்டுடென்ட் கிட்ட இந்த மாதிரி கேள்வியா? ஹ ஹ ஹ. இப்போ தான் சார் இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரி வேகமாக வளரும் போல் இருக்கு. நாங்க வேற டாப் கிளாஸ் காலேஜ்லிருந்து பாஸ் ஆகியிருக்கோம். முன்னாடி நிறைய வாழ்கை இருக்கு சார். இப்போ போயி எதுக்கும் வாழணும்ன்னு கேட்டுண்டு.
ஆனா நீங்க கேக்கறது எனக்கு புரியறது. நான் நிறைய நாவல் படிப்பேன். இந்த விஷயத்தை பத்தி பல ஐரோப்பிய நாவலாசிரியர்கள் பேசியிருக்காங்க. காமு, சார்த்தர், தாஸ்தாவெஸ்கி இப்படின்னு பல பேரு. அங்க நிஹிலிசம்ன்னு ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா? அந்த தத்துவத்தின்படி நமக்கு இந்த உலகத்துல ஒண்ணும் புரியாது. ஒரு மாதிரி சூன்யம் இந்த உலகம்ன்னு அந்த தத்துவம் சொல்லுதாம். புத்தரும் இதே தத்துவத்த சொன்னாரா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா புத்தர் சொன்னது வேற நிஹிலிசம் வேறன்னு சொல்றாங்க. தத்துவம் படிச்சா மண்ட குழம்பிடும். நான் ரிலேடிவிட்டி தியரி படிச்சவன். இந்த தத்துவம்லாம் படிச்சா அதுவே சுலபமா இருக்கும் போல் இருக்கு.
ஆனா ஐரோப்பால நிஹிலிசம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தினதா சொல்றாங்க. பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் தற்கொல செஞ்சிண்டாங்களாம். இதுக்கு எதிரா காமு ஒரு பெரிய கட்டுரை எழுதினதா என் நண்பன் அசோக் சொல்றான். அவனும் நானும் ஒரே கம்பனில சேரப் போறோம்.
வாழ்க்கைல எவ்வளவோ செய்யணும் ஆனா ஒரு அம்பது வயசுல டக்க்னு போயிடணும். எங்க கொள்ளு தாத்தா பாவம். படுத்த படுக்கையா இருந்து, அவரும் கஷ்டப்பட்டு எல்லோரையும் துன்புறுத்தி போனாரு. அது மாதிரி இல்லாம ஒரு ஹார்ட் அட்டாக்ல போயிடணும். அது ஒண்ணுதான் ஏன் அசை,
கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்: வாங்க சார் வாங்க. போன முறை நீங்க ஏதோ தமாஷுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். நிஜமாவே வந்துட்டீங்க. உங்க திட்டம் நல்லா இருக்கு. பத்து வருஷத்துக்கு ஒரு முறை இந்த கேள்விய கேக்கறது. என்ன மாற்றம் நிகழ்ந்திருக்குன்னு பார்க்கறது.
நான் காலேஜ் விட்டு வெளீல வந்தவுடனே இப்ப தான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு நினைச்சேன். ஆனா பத்து வருஷம் கழிச்சி இப்போதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவுதுன்னு ஒரு உணர்வு இருக்கு. ஏன்னா நான் காதலிக்கும் பெண்ணை அடுத்த மாசம் கல்யாணம் செஞ்சிக்க போறேன்.
நான் வேலைல சேர்ந்த பிறகு ஆபிஸ ஒரு கலக்கு கலக்கிட்டேன். நான் முதல் முறையா கோட் பண்ணத கிளையேன்ட் ரொம்ப பாராட்டினான். வேலைக்கு சேர்ந்த ஆறு மாசத்துல என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அந்த ப்ராஜெக்ட் சரியா முடிச்சேன். அந்தக் காலம் இப்போ போல் இல்ல. அப்போ எல்லாம் அமெரிக்கா போற கனவே காண முடியாது. நான் போனது பல பேருக்கு அசிடிடி கொடுத்தது. என் நண்பன் அசோக்கும் வயிறு எறிஞ்சான். ரெண்டு வருஷம் அங்க இருந்துவிட்டு திரும்பி வந்தேன்.
என் கதைய விடுங்க. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்? இப்போ இது போன்ற கேள்வியெல்லாம் யாரும் கேக்கிறதில்ல. மாணவனா இருந்தபோது நாங்க எல்லோரும் புத்தகம் படிப்போம், விவாதிப்போம். இப்போ புத்தகம் படிக்கிற டைம் இல்ல. படிச்சாலும் விவாதிக்க ஆள் இல்ல. வேலை, வேலை, வேலை. நாமும் முன்னேறுகிறோம். கம்பனியும் முன்னேறுகிறது. காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும் சார். நின்று நிதானமா யோசிக்கற அளவுக்கு டைம் இல்ல சார். இருக்கவும் கூடாது. அப்ப தான் முன்னேற முடியும்.
எதுக்காக வாழணும்? எதிர்காலத்துக்காகதான். எதிர்காலம் நல்லா இருக்குன்னா வாழ வேண்டியதுதான். நான் ப்ராஜெக்ட் லீட் ஆன பிறகு அவ என் டீம்ல சேர்ந்தா. அன்றைக்கே காதல்வயப்பட்டுட்டேன். அழகியா இல்லையான்னா எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனா எனக்கு அவ தான் பொருத்தமான பெண். இவ கூட வாழ போகிறோம் என்று நினைக்கிற பொழுதே எவ்வளவு வருடங்கள் வேணுமானாலும் இந்த உலகத்துல வாழலாம்ன்னு தோணுது சார். இப்ப இந்த கேள்விக்கு அவசியமே இல்ல.
கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்: கரெக்டா வந்துடிறீங்க சார். பத்து வருஷம் ஆனாலும் எப்படியோ என்ன தேடி கண்டுபிடிச்சிடறீங்க.
இந்த முறை உங்களுக்கு ஸ்ட்ராங்கா பதில் சொல்லலாம். நாம நம்ம குழந்தைகளுக்காக வாழணும். எனக்கு இப்போ ரெண்டு குழந்தைங்க. ஒவ்வொரு நாளும் ஆபிஸ்ல இந்த பாலிடிக்ஸ் எல்லாம் டீல் பண்ணிட்டு வீட்டுக்கு சோர்வா வரும்போது அந்த குழந்தைங்க சிரிப்ப பார்த்தா வரும் ஆனந்தம் வார்த்தைல சொல்ல முடியாது சார். க்ளுகோஸ் குடிச்ச மாதிரி இருக்கும்.
குழந்தைங்க இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். முன்ன மாதிரி இல்ல சார் இப்போ. ஆபிஸ் பூரா பாலிடிக்ஸ். நான் எல்லா வேலையும் பண்ணி கஸ்டமர குஷிப்படுத்தி பிஸ்னெஸ் டெவெலப் பண்ணேன். ஆனா என்ன லாபம்? எனக்கு ப்ரமோஷன் குடுத்தாங்க சரிதான். நானும் அப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அடுத்த நாளே அசோக்குக்கும் ப்ரமோஷன் குடுத்தாங்க. அவன அமெரிக்கா அனுப்பினாங்க. என்ன கேட்டாங்க ஆனா மனைவி கர்ப்பமா இருந்தா. என்னால போக முடியல. அவன் என் அளவுக்கு என்ன வேல பண்ணான்? ஏதோ பாஸ் கூட சிரிச்சி சிரிச்சி பேசுவான். எப்படியோ ப்ரமோஷன் வாங்கிட்டான். எல்லோருக்கும் ப்ரோமோஷன் குடுத்தா வேலை செய்யறவனுக்கு என்ன சார் மதிப்பு? சரி விடுங்க. கார்ப்ரட்ல இதெல்லாம் சகஜம்.
இப்போ உங்க கேள்விக்கு வருவோம். நாம நமக்காக வாழணுமா இல்ல நம்ப சார்ந்து இருக்கிறவங்களுக்காக வாழணுமா? என்ன பொருத்த வரையில இது தான் கேள்வியா இருக்க முடியும். இதுக்கு பதில் சொன்னா உங்க கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி. நான் பைரப்பா எழுதின ‘வம்ச வ்ரிக்ஷா’ படிச்சேன். அதுல ஒரு குழந்தை தாய் தந்தைக்கு மட்டும் சொந்தம் இல்ல. அவங்க வம்சத்துக்கே சொந்தம்னு அதுல வரும் முக்கியமான கதாபாத்திரம் வாதாடுறாரு. என்னால அத ஏற்க முடியல. குழந்தை அதைப் பெற்றவர்களுக்கு தானே சொந்தம்? ஆனா அந்த ஒரு பாய்ண்ட் ஆப் வியூ தப்புன்னு சொல்ல முடியல. இந்த காலத்துக்கு அதெல்லாம் சரி வராது. என் அப்பா அம்மா என் கூட தான் இருக்காங்க. அவங்களுக்கு பேரன் பேத்தி மேல அலாதி ப்ரியம் ஆனா அதுக்குன்னு அவங்களால நம்ம குழந்தைங்க எதிர்காலத்த டிசைட் பண்ண முடியாது இல்லையா?
ஹ ஹ ஹ. ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்.
கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்: முதல் முறையா நானே என்னை இந்த கேள்வி கேட்டுக்கொண்டேன். உலகம் ரொம்ப மாறிவிட்டது சார். எதுக்குமே மதிப்பில்லாம போயிடிச்சி. பணம் தான் முக்கியம்னு ஆயிடிச்சி. நான் எவ்வளவு வருஷமா இந்த கம்பெனிக்காக பாடு பட்டிருப்பேன். எவ்வளவு உழைச்சேன். என் உழைப்புனால எவ்வளவு புது கஸ்டமர் கிடைச்சாங்க. ஒரு டவுன்ட்டர்ன் வந்தவுடனே யார தூக்கலாம்னு பாக்கறாங்க. லாயல்டி, உழைப்பு எதுக்குமே மரியாத இல்ல. காக்கா பிடிக்கறவங்க தான் வாழறாங்க. என்ன நேரா கூப்பிட்டு “போடா வெளியிலே”ன்னு சொல்லிருந்தா அது மரியாதையா இருந்திருக்கும். ஆனா இவங்க அப்படி செய்யல. என்னை ஒரு பவர் இல்லாத ரோலுக்கு மாத்தினாங்க. ஏழு வருடமா ப்ரமோஷன் இல்ல. ரெண்டு வருஷம் இன்க்ரிமென்ட் இல்ல. இன்க்ரிமென்ட் குடுத்தாலும் ஏதோ ரெண்டு பர்சென்ட் மூணு பர்சென்ட்ன்னு குடுக்கறாங்க. அதே அசோக்க பாருங்க. நல்லா அமெரிக்கால செட்டில் ஆயிட்டான். கம்பனி அவனுக்கு கிரீன் கார்ட் ஸ்பான்சர் செஞ்சது. அவனுக்கு இந்த அஞ்சு வருஷத்துல ரெண்டு ப்ரமோஷன். என்னால உயிர் வாழ்ந்தவன், காக்கா பிடிக்கிறதா தவிர ஒரு டாலேன்ட் இல்லாதவன். அவனுக்கு எப்படி ஒரு வாழ்வு பாருங்க.
போடா கொய்யான்னு ராஜினாமாவ வீசி எறிஞ்சிட்டு வந்துடலாம். ஆனா நம்ப குடும்பத்துக்காக அத செய்யாம இருக்கேன். இப்போ என் கூட வேல செஞ்ச பிஸ்வாஸ்ஸ எடுத்துக்கோங்க. அவனுக்கு ஒரே குழந்தை. அவன் பெண்டாட்டி நல்ல வேலைல இருக்கா. நல்ல சம்பாத்தியம். அவன வேற ரோல் எடுக்க சொன்னாங்க. அவன் உடனே ராஜினாமா செஞ்சிட்டு பெண்டாட்டி பணத்துல சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா இருக்கான். நமக்கு அப்படி முடியலை. அதுனால பல்ல கடிச்சிண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். வெளியில வேற என் வயசு ஆளுங்களுக்கு வேலை கிடைப்பதில்லை.
இப்போ என்னோட குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளைகள நல்லா படிக்க வச்சு நல்ல future அமைச்சு கொடுக்கணும். அது தான் வாழ்க்கைல முக்கியம். நம்ப வாழ்க்கையே நம்ப குடும்பத்துக்கு தான்.
கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்- மனசு நெறஞ்சிருக்கு சார். போன வருஷம் என்னுடைய அறுபதாம் பிறந்த நாள ரொம்ப கிராண்டா என் பிள்ளைகள் கொண்டாடினார்கள். எல்லாரும் வந்து பார்டிசிபேட் பண்ணங்க. இவ்வளவு பேர் நம்ம கூட இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது மகிழ்ச்சியா இருக்கு.
அதே போல் இவ்வளவு வருஷம் நாம உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதே இந்த காலத்துல ஒரு சாதனையா இருக்கு. பாவம் அசோக். நல்லா ப்ரோமோஷன் வந்துது. ஆனா என்ன லாபம். ஒரே ப்ரெஷர். சட்டென்று ஒரு நாள் மாரடைப்புல போயிட்டான். எல்லோருக்கும் ஒரே ஷாக். “நல்ல வேள உங்களுக்கு ப்ரோஷன் வரல. அந்த ப்ரெஷர் உங்களுக்கு இல்ல. ஆள் இல்லாம பணத்த வச்சிண்டு என்ன பண்றது?” என்று என் மனைவி கேட்டாள். அதுவும் உண்மைதான்.
ஒரு விதத்துல வேலைய விட்டதும் நல்லது தான். நல்ல டைமிங்க்ள விட்டேன். பையன் ஒரு மாதிரி அமெரிக்கால வேலைல சேர்ந்த பிறகு நான் இங்க வேலைய விட்டேன். பிறகு ஸ்டார்ட் அப்ல கொஞ்ச நாளு, ஒரு காலேஜ்ல லேக்சுரர்ரா கொஞ்சம் நாளுன்னு வண்டி ஓடிச்சி. அப்புறம் டாட்டர்-இன்-லா பிரேக்னேன்ட் ஆனா. பெண்ணு கல்யாணமாகி ஜெர்மனி போயிட்டா. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் அமெரிக்கா, கொஞ்ச நாள் ஜெர்மனின்னு வண்டி ஓடுது.
எப்பவுமே நான் உங்க கேள்விக்கு டைரெக்ட்டா பதில் சொல்றதில்ல. ஹ ஹ ஹ. இப்போ நான் வாழறது என் பேர பிள்ளைகளுக்காக தான். இப்போ எங்க உலகமே அவங்கதான்.
கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்: நீங்க புதுசா தம்பி. அவர் வரலையா? ஒ. என் மனைவியும் கான்சர்ல தான் இறந்தா. லங்க் கான்செர். அவ போன பிறகு எதுக்கு வாழணும் தான் இருக்கு. ஏன் வாழணும்னு கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கு. பதில் தான் தெரியல. பசங்க ரெண்டு பேரும் வேற வேற எடத்துல இருக்காங்க. எனக்கோ அங்க இருக்க பிடிக்கல. இங்க ஒரே தனிமை. என் மனைவி என்ன பாடு பட்டா. உதவிக்கு யாரும் இல்ல. இந்த நகரத்துல எனக்கு பல சொந்தக்காரர்கள். ஆனா எல்லோரும் அவங்க அவங்க வேலைல இருக்காங்க. நம்ம ஒத்தாசைக்கு வேலைக்கார்கள் தான். அவங்கள் நம்பி தான் பல பேர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு தம்பி. நம்ப பிள்ளைகள விட வீட்டுக்கு வர நர்சுக்கு தான் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு.
நம்ம பிள்ளைக இங்க இருந்தா நமக்கு ஒரு சந்தோஷம். இப்போ எல்லாம் பேர பிள்ளைகள கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல தான் பாக்க முடியறது. எங்க சம்பந்தி கதியும் இதேதான். என் பையனோட மாமியார் தனியா இருக்கா பாவம். மாமனாருக்கு சுகர். கிட்னி கோளறு. ரொம்ப துன்பப்பட்டு இறந்தாரு பாவம். அவர் போனது எல்லோருக்கும் ஒரு ரிலீப்.
இந்த தனிமைல வாழ்க்கையோட அர்த்தம் என்னனு தேடிக்கொண்டிருக்கிறேன். பல புக்ஸ் படிக்கிறேன். ஆனா ஏனோ மனம் அதுல லயிக்க மறுக்கிறது. என் மனைவியோட நினைவு இன்னும் என்னைவிட்டு நீங்கலைன்னு நினைக்கிறேன். எப்போவும் அவ தான் ஞாபகம் வருகிறாள். ஹ்ம்ம். ஏதோ நம்மள யம தர்மன் அழைக்கும் வரை வாழ்ந்துக்கொண்டிருக்க வேண்டும். அது தான் விதி.
கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?
பதில்: நீங்க வேற ஆளா? அவர் ரிசைன் பண்ணிட்டாரா? இந்த காலம் அப்படி. நாங்க எல்லாம் முப்பது ஆண்டுகள் ஒரே கம்பனில இருந்தவங்க. அந்த வால்யூ சிஸ்டம் இப்போ இல்லை. மாரல்ஸ் மாறி போச்சு. நீ கேட்ட இல்லையா ஒரு கேள்வி, “எதுக்கு உயிர் வாழணும்’ன்னு. இதுக்கு தான் உயிர் வாழணும். அதாவது என்ன போல் பெரியவங்க, இந்த தலைமுறைக்கு ந்யாயம்னா என்ன, தர்மம்ன்னா என்னான்னு எடுத்து சொல்லணும். அதுக்காக நாங்க வாழணும்.
நான் தினமும் கோவிலுக்கு போறேன். தினமும் அங்க அரை மணி லெக்சர் குடுக்கிறேன். பல ஆர்டிகல்ஸ் எழுதுகிறேன். உலகம் பூரா பல பேர் அத படிக்கறா. எனக்கு எவ்வளு மெசஜ், எவ்வளு மெயில் தெரியுமா. என் பொண்ணு இப்போ ஹாலந்த்ல இருக்கா. அவ ஒரு நாள் போன் பண்ணி, “அப்பா இங்க ஒருத்தர் உங்க ஆர்டிகல் படிச்சி ரொம்ப புகழ்ந்தார். ஐ யாம் ப்ரௌட் ஆப் யூ” சொன்னா. போன முறை பையன பாக்க அமெரிக்கா போன போது அவங்க கோவில்ல மூணு நான் அத்வைதம் பத்தி பேசினேன். என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா. பேரன், பேத்திக்கெல்லாம் ஒரே ஆச்சரியம், “யூ ராக் தாத்தா”ன்னு சொன்னா என் பேத்தி. இப்போ கோவில்ல நடக்கற எல்லா விசேஷத்துக்கும் நான் இருந்தாகணும். பல ஏழை பசங்களுக்கு படிக்க உதவற டிரஸ்ட் வச்சிருக்கோம். நீங்க கூட எதாவது குடுக்கலாம். டாக்ஸ் exemption உண்டு. நேத்தி சுவாமிஜி வந்தார். என்னோட நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் நாங்க செய்கிறதெல்லாம் மெச்சினார். ஏதோ பகவான் புண்யத்துல நம்மளால முடிஞ்சத செய்யமுடியறது.
ஓம் சத்குருவாய நமஹா.
Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், சிறுகதை
