செமிகோலன்
முதல் ஐம்பது, அறுபது பக்கங்கள் அரையிருளில் தோன்றும் கரமுண்டார் வூடை, அதில் வசிக்கும் பல குடும்பங்களை (நூறு பேராவது வசிப்பார்கள் என்று யூகிக்கலாம்), அதன் முக்கிய மனிதர்களை, காட்டுகிறது. (கூட One Hundred Years Of Solitudeன் Buendia வீடும் மனக்கண்ணில் தோன்றுகிறது). பிரயாணம் செய்ய கொஞ்சம் கடினமான இந்தப் பகுதியை கடந்து விட்டால், வூடும், மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக துல்லியமாக தென்பட ஆரம்பிக்கிறார்கள். அதுவரை பொறுமை காப்பது வாசகனுக்கு பயனளிக்கும். அது தொடர்பான இரு விஷயங்கள்:
முழு நாவலைப் பற்றியில்லாமல், ப்ரகாஷின் புனைவுலகிலும், அவற்றைப் பற்றிய வாசக கருத்துக்களிலும் அதிகம் தென்படும் ‘மனுஷன் தானே’, ‘எல்லாமே அசிங்கம்’, போன்ற சொற்றொடர்களை அவற்றை முன்வைத்து சில எண்ணங்கள். அருவருப்பானது, அசிங்கமானது என்று பொது சமூகம் ஒதுக்கும் விஷயங்களை அவர் பதிவு செய்கிறார் என்பதை சுட்டும் சொற்றொடர்களாக அவற்றை புரிந்து கொள்ளலாம். அவை நியாயமானவையும் கூட. நாம் அருவருப்படையும், நம்ப மறுக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றன, அவற்றின் சதவீதம் குறைவாக இருப்பதாலேயோ, ‘கழிப்பறை வீட்டில் உண்டு, அதற்காக அதை ஹாலில் வைக்க முடியுமா’ போன்ற வாதங்களாலோ, அத்தகையவற்றை பதிவு செய்வதை ஒதுக்குவது சரியாக இருக்காது, எழுத்தாளன் செல்லும் மனப் பாதை அவனுடையதே, அதில் மலமிருந்தாலும், அதில் செல்ல அவனுக்கு உரிமையுண்டு. இந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாவலில் இரு நிகழ்வுகள். முக்கிய பாத்திரமான தெகல்ராஜு சித்தப்பனுடன் பள்ளக் குடிக்கு செல்கிறான். ஒரு பெண்ணுடன் பாதி கலவியில் இருக்கும் போது, சித்தப்பா அவளை உறவுக்கு அழைக்க அவள் சென்று விடுகிறாள். இப்போது அவள் மகள் வந்து, அவனுடன் கலவி கொள்கிறாள், சித்தப்பனுடன் இருந்த பின், தாய் மீண்டும் வந்து, threesome நடக்கிறது. இரு முறை. இந்தப் பாலியல் சுரண்டல் குறித்து என்ற விமர்சனம் வரும், அதை எப்படி ப்ரகாஷ் எதிர்கொள்கிறார் என்று நாவலை படித்து அறிந்து கொள்ளலாம். Threesome, தொடர்ச்சியாக இரு ஆண்களுடன் உறவு என்பதெல்லாம் நடக்காது என்றில்லை, அவற்றைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. இந்த நிகழ்வுக்கான Logistics பற்றி கொஞ்சம் யோசிக்கலாம், ‘மீறல்’, ‘இதெல்லாம் நடக்குமா’ என்று நாம் எண்ணுபவற்றை உடைத்தெறிய ப்ரகாஷ், ஒரு எல்லையிலிருந்து, மற்றொன்றுக்கு போகிறாரோ, அங்கு செல்ல அவர் உபயோகிக்கும் ex deus machina தான் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மற்றொரு நிகழ்வு. காத்தாயம்பா, கரமுண்டார் வீட்டின் குல தெய்வம் போல, தெகல்ராஜுகாகவே காத்திருப்பவள். ஆனால் அவனை தன்னை தொடக் கூட விடாதவள், அதே நேரம் உடல் தாபத்தை செல்வி என்ற பெண்ணின் மூலமாக, – தற்காலிகமாக – அடக்கிக் கொள்கிறாள் கலியன் பள்ளன். கரமுண்டார் ஒருவர் தங்கள் குடிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்து விட, கலியன் காத்தாயம்பாவை கடத்திச் செல்கிறான். அதன் பின்னான, அடுத்த மூன்று நாளின் நிகழ்வுகள், வாசகனுக்கு பூடகமாக சொல்வது, காத்தாயம்பா அவனுடைய வன்புணர்ச்சியை ஒரு கட்டத்தில் விரும்புகிறாள், அது இருவரும் இணையும் கலவியாக மாறுகிறது. மனித இச்சைகள் செல்லும் திசைகள் யாரும் அறியக் முடியாதவை என்று ப்ரகாஷ் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம், Stockholm syndrome, பற்றியெல்லாம் நாம் கேள்விபட்டது தானே. சரி, அடுத்து என்ன நடக்கிறது. ‘நீ சிறு வயதிலிருந்தே’ என் மீது ஈர்ப்பு கொண்டாய் என்று எனக்குத் தெரியும்’ என்பது போல் சொல்லும் காத்தாயம்பா, இனி அவனுடன் தான் இருப்பேன் என்று சொல்கிறாள். அவர்களை தேடி வருபவர்களிடமிருந்து தப்பி, பேருந்தில் ஏறி செல்கிறார்கள். கரமுண்டார் வீட்டை விட்டு காத்தாயம்பா ஏன் செல்ல நினைக்கிறாள் என்பது அதுவரை நாவலை கூர்ந்து வசிப்பவனுக்கு புரியும். கடத்தல், வன்புணர்ச்சி, விருப்பத்துடன் கலவி எல்லாம் அதற்கான வழியா என்று தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.யுவன் சந்திரசேகரனின் கதையொன்றில், வீட்டினுள் திருட வந்தவன், கணவன் மனைவியை கட்டிப் போட்டு விட்டு, மனைவியை வன்புணர்வு செய்து விடுவான். அதன் பின் மனைவி பிரிந்து சென்று விடுவாள். அதற்கு அப்பெண் சொல்லும் காரணத்தில் உள்ள உளவியல் நுட்பத்தை காத்தாயம்பா, கலியனுடன் செல்வதற்காக சொல்லும் காரணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வித்தியாசம் புரியும். எழுத்தாளனின் பாதை அவனுடையதே, அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூறவில்லை, எளிதான பாதையோ -இன்னொரு ex deus machina-என்று தான் தோன்றுகிறது, குறிப்பாக மாயி – தெகல்ராஜு உறவையும் கவனத்தில் கொள்ளும் போது.
மாயி என்ற பள்ளப் பெண் கலியனை காண வருகிறாள், – காத்தாயம்பா கடத்தலுக்கு முன்பு இது நிகழ்கிறது-. ஊரில் தெகல்ராஜுவை சந்திக்கிறாள், உடன் கலவி. கலியனை மறந்து விடுகிறாள், தெகல்ராஜுவை நீங்க மறுக்கிறாள். காத்தாயம்பா , கலியன் ஓடிச்சென்ற பிறகு, மாயி தெகல்ராஜுவின் வீட்டிலேயே வசிக்க ஆரம்பிக்கிறாள்.
கள்ளன்-பள்ளச்சி, பள்ளன்-கள்ளச்சி, என ப்ரகாஷ் கலைத்து போட விரும்புகிறார் என்று புரிகிறது, நிஜத்தில் இப்படி நடப்பது இயல்பான ஒன்று தான். மனித மனம் எப்போது வேண்டுமானாலும் மாறவும் கூடும் தான். அதற்காக அவர் உபயோகிக்கும் உத்திகள், அவர் உருவாக்கும் ஒரு உச்ச கணத்தின் முந்தைய கணங்களில் அதற்கான சுட்டுதல் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி தான் வாசகனை சிந்திக்க வைக்கிறது. கருப்பு-வெள்ளை என்று பொது புத்தியில் இருப்பதை, வெள்ளை-கருப்பு என்று மாற்றிப் போடுவதும், எல்லாவற்றையும் கலைத்துப் போடுவதும் சாதாரண ஒன்றல்ல, துணிவும், தன் எழுத்தின் மீது நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ப்ரகாஷிற்கு இரண்டும் உள்ளது, அதை வெளிப்படுத்தும், தனித்துவமான மொழி நடையும் உள்ளது. ஆனால் அதைக் கொண்டு அவர் தன் புனைவுலகை கட்டமைக்கும் விதம்? அவ்வப்போது இச்சை, மனுஷ ஜன்மம், அசிங்கம், போன்றவை உரையாடல்களாக, எழுத்தாளர் கூற்றாக வருவதை அவர் கட்டமைப்பதை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்துகிறதே தவிர, அந்த கட்டமைப்பில் உள்ள சில விரிசல்களை மறைப்பதில்லை. மாயி- தெகல்ராஜு உறவை கூட, ‘ஆமாம் மனிதர்கள் இப்படித்தான், வாய்ப்பு கிடைத்தால் எல்லாம் செய்வார்கள்’ என்று நியாயப்படுத்த முடியும், அது சரியும் கூட. ஆனால் அதை ஏற்றுக் கொண்டே, அந்த விஷயத்தை நிறுவ, மீண்டும் மீண்டும் அதையே வேறு வேறு வடிவங்களில், -பெரிதாக காரண காரியங்கள் இன்றி – சம்மட்டியால் அடிப்பதை போல், சொல்வதையும் விமர்சிப்பது சரியாகத் தான் இருக்கும். காரண காரியங்கள் இன்றி, என்று குறிப்பிடும் போது, ஒன்றுக்குப் பின் இரண்டு, என்ற ஒழுங்கு வரிசையில் நடைபோடும் சம்பவத் தொகுப்பை சுட்டவில்லை, யதார்த்தத்தில், எந்த தர்க்கத்திற்கும் அடங்காத நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. எது வரை எதார்த்தம் மீறப்படலாம் என்பதையும் யாரும் அறுதியிட்டு கூற முடியாது, எந்தளவிற்கு அந்த எதார்த்த மீறல், புனைவில் பொருந்தி வருகிறது என்று மட்டும் பார்க்கலாம்.
ஒரு தரப்பால் ‘எளிய பகற்கனவுகளை பேசுகிறது’, ‘வெறும் காமம்’ மட்டுமே என்று ப்ரகாஷின் படைப்புக்கள் பார்க்கபடுகிறது. இன்னொரு புறம் ‘குமாஸ்தா எழுத்துக்கு எதிரானது’, ‘அம்மாஞ்சிகளுக்கு, மரபார்ந்த எழுத்தை வசிப்பவர்களுக்கு இது பிடிபடாது’ என்றும் கொண்டாடப்படுகிறது. முதல் தரப்பினர், ‘தரிசனம்’, ‘முழுமையடையவில்லை’, போன்ற சொற்றொடர்களை ப்ரகாஷின் புனைவின் மீது போட்டுப் பார்த்து, அவருடைய மொழி நடையை, அவருடைய பல ex deus machinaகளுக்கு இடையே உள்ள நுட்பமான மன விகாசங்களை, அவர் காட்டும் சமூக சித்திரங்களை தவற விடுகின்றார்கள்,. இரண்டாம் தரப்பை புரிந்து கொள்வது எளிது, பெரும்பாலோனோர் பேசாத கட்டற்ற காமம், ஒரு பால் இச்சை, போன்றவற்றை பேசுபவர் என்பதாலேயே ப்ரகாஷ் முக்கியமானவராகி விடுகிறார், ஆனால் ஒட்டு மொத்தமாக அவருடைய புனைவுகளை இரு தரப்பினரும் பார்க்கிறார்களா? இரண்டும் சேர்ந்த வாசிப்பு அவருடைய புனைவுலகைப் பற்றிய இன்னும் ஆழமான புரிதலைத் தரும். இது இரு பக்கமும் நியாயம் உள்ளது எனும் ‘நடுநிலை’ அல்ல, இரு வேறு வாசிப்பு பாணிகளை அடையாளம் கண்டு, ஒரு புனைவில், அவை ஒன்றிணையும் போது உருவாகும் சித்திரத்தைப் பற்றியதே.